ஒரு நெடிய பயணத்துக்கு கிளம்பும் ரயில் வண்டி ஆரம்பத்தில் மெதுவாக கிளம்பி, தண்டவாளத்தில் பழகிய பிறகு, இனி பயணமே முக்கியம் என்று வேகம் பிடிப்பது போல பொன்னியின் செல்வனின் முதல் இரண்டு பகுதிகளில் கதையின் சம்பவங்களை விட சூழலையும், பின்புலத்தையும் அதிகம் அலசிய பின்பு மூன்றாவது பாகத்தில் கதை வேகம் பிடித்துள்ளது. முதல் இரண்டு பாகங்களை விட இதில் தான் சம்பவங்கள் அதிகம். அதனால் கதை விறுவிறுப்பு கூடியுள்ளது போல தோன்றுகிறது. 1 வாரத்தில் மொத்த புத்தகத்தையும் (3வது பாகத்தை) படித்த எனக்கே சம்பவங்களை மீண்டும் யோசித்து பார்க்கும்போது சில காட்சிகள் விட்டுப்போகும்போது, இதனை வருடக்கணக்கில் தொடராக படித்த வாசகர்களின் நினைவு சக்தியை பாராட்ட தோன்றுகிறது. எனினும் இந்த பதிவில் மூன்றாம் பாகத்தின் கதையை சுருக்கமாக summarise செய்ய முயற்சிக்கிறேன்.
இதில் முதல் இரண்டு பகுதிகளில் வந்தது போல மனதை மயக்கும் வர்ணனைகள் மிக குறைவு. நாவலின் ஆரம்பத்தில் வரும் மாலையிலிருந்து இரவுக்கு மாறும் சாந்தியின் வர்ணனை மிக அழகு. அதை விட்டால்..... பள்ளிப்படையில் நடக்கும் நள்ளிரவு சதித்திட்டங்கள் குறித்த வர்ணனைகள் படிப்பவர்களை அந்த இடங்களிலேயே இருப்பது போல சில்லிட வைப்பவை. மற்றபடி முன்பே சொன்னது போல இந்த பாகத்தில் சம்பவங்கள் தான் அதிகம். அதனாலேயே ஒருவித பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. OK.. இந்த மூன்றாம் பாகத்தில் நடக்கும் சம்பவங்கள் என்ன?
இரண்டாவது பாகத்தின் இறுதியில் கடலில் தத்தளிக்கும் இளவரசரையும், வந்தியத்தேவனையும் பூங்குழலி காப்பாற்றுவதாக முடிந்த புள்ளியில் இருந்தே மூன்றாம் பாகம் துவங்குகிறது. இலங்கையில் பரவி வந்த குளிர்ஜுரம் கடலில் குதித்த இளவரசரை தொற்றிக்கொள்ள, அவரை ஜுரத்திளிருந்தும், பழுவேட்டரையர்களின் படையிடமிருந்தும் காப்பாற்ற நாகைப்பட்டினத்திலுள்ள புத்தவிஹாரத்துக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர் பூங்குழலியும், வந்தியத்தேவனும் மற்றும் குந்தவையிடமிருந்து செய்தி கொண்டுவந்த சேந்தன் அமுதனும். இடையில் பழுவேட்டரையருடன் நந்தினியும் கோடிக்கரைக்கு வந்து இளவரசர் உயிரோடு இருக்கிறாரா என்று அறிந்துக்கொள்ள முயல்கிறாள். ஆதித்த கரிகாலரின் நன்பம் பார்த்திபேந்திரன் நந்தினியின் அழகில் மயங்கி அவளது கட்டளைகளை சிரமேற்கொள்ள தயாராகிறான். நந்தினியின் கட்டளையை ஏற்று ஆதித்த கரிகாலனை கடம்பூர் சம்புவராயரின் அரண்மனைக்கு அழைத்து வர கிளம்புகிறான் பார்த்திபேந்திரன் பல்லவன். நடுவில் வந்தியத்தேவன் மந்திரவாதி ரவிதாசனிடம் இருந்து இளவரசரையும், பூங்குழலியையும், சேந்தன் அமுதனையும் பிரித்து ஓடத்தில் ஏற்றிவிட்டுவிட்டு குந்தவைக்கு செய்தி சொல்ல பழையாறைக்கு கிளம்புகிறான். பூங்குழலியும், சேந்தன் அமுதனும் இளவரசரை பத்திரமாக நாகைப்பட்டின சூடாமணி விஹாரத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர்.
பழையாறைக்கு கிளம்பிய வந்தியத்தேவன் வழியில் ஒரு கொல்லன் பட்டறையில் பாண்டிய நாட்டு வாள் ஒன்று செப்பனிடப் படுவதை பார்க்கிறான். அங்கிருந்து போகும் வழியில் தேவராளனால் கடத்தப்பட்டு நந்தினியின் முன் நிறுத்தப்படுகிறான் வல்லரையன். நந்தினி அவனிடமிருந்து கடலில் குதித்த இளவரசரை குறித்து தகவல் பெற முயற்சிக்கிறாள். ஆனால் பெரிதாக ஒன்றும் பெயரவில்லை. எனினும் வல்லவரையனை விடுதலை செய்யுமாறு தனது கூட்டாளிகளுக்கு உத்தரவிடுகிறாள். அங்கிருந்து எப்படியாவது பழையாறை அரண்மனைக்குள் நுழையவேண்டும் என்று தீர்மானிக்கும் வந்தியத்தேவன் மதுராந்தக சோழரின் கவனத்தை ஈர்த்து நிமித்தக்காரனாக வேடமிட்டு உள்ளே நுழைந்துவிடுகிறான். பின்னர் குந்தவையையும் சந்தித்துவிடுகிறான். ஆனால் இளவரசர் இறந்த செய்தி கேட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறாள் வானதி. அவளை குந்தவையையும், வந்தியத்தேவனும் காப்பாற்றிவிடுகின்றனர். அரண்மனையில் மக்கள் கூட்டம் இளவரசர் இறந்த செய்தி கேட்டு கூடிய கூட்டத்தில் வந்தியத்தேவனுக்கும், வைத்தியர் மகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டுவிட இவர்களை கைது செய்கிறார் முதல்வர் அநிருத்த பிரம்மராயர். சிறையிலிருந்து வந்தியத்தேவனை விடுதலை செய்து தன இதய சிறையில் அடைக்கிறாள் குந்தவை. வந்தியத்தேவனுக்கு ஆதித்த கரிகாலனை நந்தினியின் சதியிலிருந்து காப்பாற்றும் பொறுப்பை கொடுத்து காஞ்சிக்கு அனுப்புகிறாள் குந்தவை.
இதற்கிடையில் குந்தவையும் வந்தியத்தேவனும் பேசியதை ஒட்டுக்கேட்கும் வானதி, காரணம் ஏதும் சொல்லாமல் நாகைப்பட்டினத்துக்கு கிளம்புகிறாள். வானதியை குடந்தை ஜோதிடர் வீட்டில் சந்திக்கிறான். அவள் வந்தியத்தேவனிடம் தன்னை நாகையில் சென்று விடுமாறு கேட்டுக்கொண்டதை அரைமனதோடு தட்டிக்கழித்துவிடுகிறான். தன்னந்தனியே கிளம்பும் வானதியை காலாமுகர்கள் கடத்திச்செல்கின்றனர். முதல்வர் அநிருத்தர் அவர்களிடமிருந்து வானதியை மீட்டு குந்தவையிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பும் வழியில் அடிபட்டுக்கிடக்கும் மதுராந்தகனை பார்க்கிறார். அவரை ஆரம்பத்தில் எதிர்க்கும் மதுராந்தகன் அநிருத்தரின் ராஜாங்க தந்திரத்தின் முன் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று உணர்ந்து சமரசத்துக்கு இறங்கி வருகிறான்.
அதே இரவு காஞ்சிக்கு செல்லும் வந்தியத்தேவன் மழைக்காக ஒரு மண்டபத்தில் ஒதுங்க அங்கே நான்கு வயது குழந்தைக்கு அரச மரியாதை செய்யப்படுவதை பார்க்கிறான். அந்த பட்டாபிஷேகத்தை நந்தினி முன்னின்று நடத்தி பெரும் சதித்திட்டம் ஒன்று அரங்கேற்றப்படுவதை பார்க்கிறான் வந்தியத்தேவன். மந்திரவாதி ரவிதாசன் வந்தியத்தேவனை கொல்லப்போக, நந்தினி அவனை தடுத்து உயிரோடு விட்டுவிடுகிறாள். நாவலின் கடைசியில் இளவரசனை குந்தவையும், வானதியும் நாகைக்கு அடுத்துள்ள ஆனைமங்களத்து நந்தி மண்டபத்தில் சந்திக்கின்றனர். அப்போது அருள்மொழி வர்மரிடம் அவர்களது தந்தை சுந்தரச்சோழரின் கடந்த கால சோகத்தை சொல்லி அந்த களங்கத்தை தீர்க்க உதவுமாறு கேட்கிறாள் குந்தவை. அப்போது பூங்குழலி மீதான தன ஆசையை சொல்ல முயல்கிறார் இளவரசர். ஆனால் அதே சமயம் பூங்குழலியிடம் தன் காதலை சொல்கிறான் சேந்தன் அமுதன். அதை ஆமோதிக்கும் விதமாக பதிலளிக்கிறாள்.
இந்த மூன்றாம் பாகத்தில் குறிப்பிடத்தகுந்தவை என்று பார்த்தால் பண்டைய தமிழகத்தின் அரசியல் ரீதியான அமைப்புகளும், சோதனைகளை அவர்கள் சந்தித்தவிதமும் தான். மேலும் சமயம் சார்ந்த பணிகளுக்கும், வைத்தியம் போன்ற பொதுப்பணிகளுக்கும் அரசகுடும்பத்தினர் செய்த உதவிகளும், அதற்கு எழுதப்பட்ட இறையிலி நிலங்கள் குறித்த தகவல்கள். மேலும் இந்த கதை நடக்கும் சமயத்தில் சைவத்தை தழைக்க செய்யப்பட முயற்சிகளும் ஞானசம்பந்தர் குறித்த தகவல்களும் படிப்பவர்களின் ஆர்வத்தை நிலை நிறுத்துபவை. எனினும் இந்த பாகத்தை மூடிவைக்கும்போது ஒரு புயல்காற்றோடு பயணித்த பிரமிப்பே மிஞ்சுகிறது.
{oshits} readers for this post!!!