நவீன கால தமிழ் இலக்கியத்தின் முக்கியமான மைல்கல் இந்த ‘பொன்னியின் செல்வன்’. நான் 4-5வது படிக்கும்போது என் அம்மா இதனை படித்து காண்பித்தார். அப்போதே என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. எனினும் இதனை நான் அபுதாபிக்கு போனபிறகு தான் படிக்க முடிந்தது. ஐய்யோ..! வெறும் எழுத்துக்கள் மூலமே நம் மனக்கண்ணில் இப்படி பழங்கால தமிழகத்தையும், வளமான வாழ்க்கையையும், ராஜதந்திரங்களையும் விறுவிறுப்பாக கொண்டு வந்து நிறுத்தமுடியுமா? என்று பிரமிப்பு தான் வந்தது. இந்த பிரமிப்பில் எனக்கு ‘பொன்னியின் செல்வனின்’ நிறைகுறைகள் எதையும் சீர்தூக்கி கூட பார்க்கத்தோன்றவில்லை. இன்னும் சொல்லபோனால் இந்த புத்தகம் படிக்க படிக்க என் மனத்திரையில் படமாக விரிந்து ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் நான் மீண்டும் அதிகமாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்ததற்கு அபுதாபியில் படித்த ‘பொன்னியின் செல்வனும்’ ஒரு முக்கிய காரணம். அபுதாபியில் இருந்து திரும்பி வந்தபோது நான் பெற்ற இன்பம் என் தமிழ் நண்பர்களும் பெறட்டும் என்று அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். மீண்டும் படிக்க ஆரம்பித்தபோது 1 மாதத்திற்குள்ளாக 5 பாகங்களையும் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் படிக்க ஆரம்பித்தேன்.

4 & 5 வது பாகங்கள் ராஜ தந்திரங்களிலும், சூழ்ச்சிகளிலும் திளைத்து பல சிறிய ஆனால் முக்கியமான பாத்திரங்கள் மூலம் தமிழ் சரித்திரத்தில் மிகப்பெரும் மாற்றங்கள் விளைவித்த நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார் கல்கி. கதாபாத்திரங்களின் மனமாற்றங்களை இயல்பாக அதே சமயத்தில் practical-ஆக கொண்டு செல்கிறார் கல்கி. படகுக்காரியான பூங்குழலி இளவரசர் அருள்மொழியிடம் காதல் கொல்கிறாள், அதே சமயம் இளவரசரும் பூங்குழலியிடம் மையல் கொள்கிறார். ஆனால் இது இருவரும் வெளிப்படுத்திக்கொள்ளாத காதல். எனினும் அந்தஸ்து வித்தியாசம் காரணமாகவும், தன் தோழிக்கு கொடுத்த வாக்குக்காகவும், political re-alignment-க்காகவும் குந்தவை அருள்மொழிவர்மனின் இந்த ஆசையை அவர் அக்கா குந்தவை நிராகரிக்கிறார். இருப்பினும் வாசகர்களுக்கு குந்தவை ஒரு கதாநாயகியாக தான் இருக்கிறாள். அது போலவே இளவரசர் மதுராந்தகர் பாத்திரமும் ஆரம்பத்தில் ஒரு மென்மையான இளவரனில் இருந்து கடைசியில் (வில்லன்) வீரனாக மாறுவது.

எனினும் எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தவை சில சம்பவங்கள் - குறிப்பாக மந்தாகினி மற்றும் வாணி ஆகிய இரு ஊமைச்சிகளை கொண்ட நிகழ்ச்சிகள். ஒட்டு மொத்த கதையுமே இந்த இரு பெண்களை சுற்றித்தான் நடக்கிறது. இதில் மந்தாகினி சுந்தர சோழரை காதலித்ததும், பின்பு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து பிச்சியாக அலைவதாகவும், அவர் மீது கொண்ட காதலை அவர் மகனான அருள்மொழி வர்மரிடம் தாய்ப்பாசமாக பொழிவதாகவும் கூறுகிறார். நந்தினியை சுந்தரசோழர் - மந்தாகினிக்கு பிறந்த பெண்ணாக தான் கடைசி வரை கதையில் கொண்டுபோகிறார். அதே போல வீரபாண்டியனை காதலியாகவும், பாண்டிய நாட்டின் பட்ட மகிஷியாகவும் கொண்டுபோய்விட்டு அவளை பாண்டியன் - மந்தாகினியின் மகள் என்று சொல்வது குழப்பத்தின் உச்சக்கட்டம்.
நான் மீண்டும் மீண்டும் இந்த நாவலை படிப்பேன் என்றே தோன்றுகிறது. நம் தமிழர்களின் கலாச்சாரத்தை, மன்னர் கால அரசியலை பல இடங்களில் ஆதாரபூர்வமாக விளக்குகிறார். இந்த parameters-களோடு கற்பனையையும் கலந்து காலத்தையும் தாண்டி நிற்கும் ஒரு நவீன இலக்கியத்தை படைத்த கல்கி போற்றி புகழப்படவேண்டியவர். அடுத்த முறை தஞ்சாவூருக்கும், கும்பகோணத்துக்கும் போகும்போது இந்த பொன்னியின் செல்வன் என் நினைவிலேயே பயணிக்கும் என்று நம்புகிறேன்.
பதிப்பாளர்கள்: இந்த நூல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு முன்பு நாட்டுடமையாக்கப்பட்டது. அதனால் இந்த புத்தகத்தை யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. அதனால் இது பாக்கெட் நாவல் சைசிலிருந்து காலத்துக்கும் பாதுகாத்துக்கொள்ளகூடிய Hard Bound புத்தகம் வரை கிடைக்கிறது. விலையும் அதுபோலவே.
விலை: ரூ. 120 முதல் ரூ. 250 (வர்த்தமான் பதிப்பகம்) முதல் ரூ. 540/- (வானதி பதிப்பகம்) வரை.
பக்கங்கள்: 2600 (தோராயமாக)
இந்த பதிவை படித்தவர்கள்: {oshits} வாசகர்கள்... இதுவரை