தனிமையிலே இனிமை காண முடியுமா?
இந்த பதிவை நான் ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கலாம், ஏனென்றால் இது உலகத்தில் உள்ள எல்லா வேலை பார்க்கும் மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியது, எனினும் என் மனதில் உள்ளதை effective-ஆக சொல்ல என் தாய்மொழியில் எழுதினால் மட்டுமே முடியும் என்பதால் தமிழில் எழுதுகிறேன். கொஞ்ச நாட்களாகவே எனக்கு தனிமை மிகவும் அதிகமாக உறைக்கத் தொடங்கிவிட்டது. வேலையில் உள்ள அழுத்தம், வெள்ளிக்கிழமை விடுமுறையில் கூட வேலை செய்யும் நிர்ப்பந்தம், இரவு அறைக்கு வந்தால் படுக்க மட்டுமே தோன்றுகிறது. இந்தியாவில் இருந்தபோது ஒரு colourful வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருந்தேன். வார இறுதிகளில் தொலைதூர பயணங்கள், புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதுப்புது கலைப்பொருள் முயற்சிகள் என வாழ்க்கை மிக அழகாக இருந்தது. ஆனால் onsite-க்கு வந்தப்புறம் வாழ்க்கை மொத்தமாக மாறிவிட்டது. வேலையினால் வரும் அழுத்தம் மட்டும் என்றால் கூட என்னால சமாளித்துவிட முடிகிறது. ஆனால் சில அனாவசியமான காரணமற்ற நிர்ப்பந்தங்களை, அதிலும் மேலதிகாரிகளால் வரும் காரணம் விளக்கப்படாத கட்டுப்பாடுகளால் சோர்ந்து போகும் மனதை, அந்த அழுத்தத்தின் வீரியத்தை தனிமை மேலும் பல மடங்காக பெருக்கிவிடுகிறது.