தெலுங்கில் யத்தனபூடி சுலோசனா ராணி எழுதி கௌரி கிருபாநந்தன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் இது. பணக்கார வீட்டில் வேலைக்காரனாக வளரும் ஒரு ஏழை கதாநாயகன் விஜய், அவனிடம் பாசமாக (மற்றும் நோயாளியாக) இருக்கும் பணக்கார வீட்டு வாரிசு அனூப், ஏழை கதாநாயகனை காதலிக்கும் கதாநாயகி ஹேமா, அவள் மீது (முக்கோண) காதல் கொள்ளும் பணக்கார வீட்டு வாரிசு, இவர்களது நெருக்கத்தை விரும்பாத அனூப்பின் தாத்தா தீட்சிதர், மேனேஜர் ஹரி.. இப்படி ஒவ்வொரு எழுத்திலும், பக்கத்திலும் cliche-க்களால் நிரம்பியிருந்தாலும், படிக்கும் போது கொஞ்சம் சுவாரசியமாகவே இருந்தது. குறிப்பாக விஜய்க்கும் ஹேமாவுக்கும் நெருக்கம் உண்டாகும் நிகழ்ச்சிகள். முடிவு என்னவாயிருக்கும் என்பதை கருவில் இருக்கும் குழந்தை கூட யூகித்துவிட முடியும். எனினும் ஏதோ ஒரு old world charm இருப்பதாக தோன்றியது எனக்கு. மேலும் இதில் மொழிபெயர்ப்புக்கும் குறிப்பிடத்தகுந்த பங்கு வகிப்பதாக கருதுகிறேன். அது ஏன் பெண் எழுத்தாளர்கள் எல்லாரும் சொல்லிவைத்தார் போல ஒரே நடையிலேயே எழுதுகிறார்கள்? முதல் பக்கத்தில் எழுத்தாளரின் பெயர் - லட்சுமி, ரமணி சந்திரன், அனுராதா ரமணன் என்று எந்த பெயர் போட்டிருந்தாலும் படிப்பவர்களுக்கு பெரிய வித்தியாசம் தோன்றியிருக்காது. கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் பொறுக்கப்பட்ட இந்த புத்தகத்தை ஏதோ ஒரு பயணத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்தபோதும் இந்த பதிவை எழுத இத்தனை நாட்கள் பிடித்தது. புத்தக விவரம்: 288 பக்கங்கள், ரூ. 65/-, கலா நிலையம், மயிலாப்பூர், சென்னை.