முள்பாதை
புத்தக விமர்சனத்துக்கு போகும் முன்பு இந்த புத்தகத்தை எப்படி நான் அறிந்தேன் என்பதற்கு ஒரு சிறிய கதை. அப்போது டி.டி-1 ல், சுஜாதாவின் ‘வாய்மையே வெல்லும்’ நாவல் ‘மறக்கமுடியவில்லை’ என்ற பெயரில் தொலைகாட்சி தொடராக வந்தது. அதனை அடுத்து ‘மறக்கமுடியவில்லை - 2’ என்று மற்றொரு கதை வந்தது. ஆனால் என்னால் அதை பார்க்கமுடியவில்லை. யதேச்சையாக 1 வாரம் மட்டும் பார்த்து இருந்தேன். பின்பு என் அண்ணி வீட்டுக்கு போனபோது பொழுதுபோகாமல் அங்கே இருந்த ஒரு புத்தகத்தை படிக்க தொடங்கினேன். பாதியில் நான் பார்த்த தொடரின் சில காட்சிகளை கதையின் சில பக்கங்களில் படித்தபோது எனக்கு ஆர்வம் அதிகமானது. விடாமல் வேகமாக 1 நாளில் அதை படித்து முடித்தேன். பின்பு தான் அதன் தகவல்களை படித்தேன். ’முள்பாதை’ என்பது அதன் பெயர், தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட நாவல் (மீனா) என்றும் தெரிந்தது. For some strange reasons, அதை எழுதியது எண்டமூரி விரேந்திரநாத் என்று நினைத்துக்கொண்டேன். இது நடந்து 14 வருடங்கள் ஆகின்றது. நான் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு இந்த புத்தகத்தை தேடினேன்... தேடினேன்... தேடிக்கொண்டே இருந்தேன் ஆனால் கிடைக்கவில்லை... சமீபத்தில் 32வது சென்னை புத்தக கண்காட்சிக்கு போகும் வரை. அல்லையன்ஸ் பதிப்பகத்தாரின் ஸ்டாலில் இந்த புத்தகத்தை பார்த்தவுடன் அப்படி ஒரு பரவசம். எனினும் கடந்த வாரம் சேலம் போனபோது தான் முழுமூச்சாக படிக்க முடிந்தது.