எண்டமூரி விரேந்திரநாத் “பனிமலை”
ரொம்ப நாளுக்கு அப்புறம் படித்த புத்தகம் இது. எனக்கு எண்டமூரியின் மீது ஏதோ ஒரு நம்பிக்கை. முதல் சில பக்கங்களிலேயே இது “பெண்மை” பற்றி பேசும் புத்தகம் என்று தெரிந்தாலும், அவருடைய “பந்தம் பவித்ரம்” போல இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் படித்தேன். அந்த கல்லூரியின் கடைசி நாளில் வைஜெயந்தி, அனுராதா, விசாலி மற்றும் பார்கவி ஆகியோர் சில வருடங்களுக்கு பிறகு குறிப்பிட்ட இந்த நாளில் இதே மரத்தடியில் மீண்டும் சந்தித்து தங்கள் வாழ்க்கை எப்படி போகிறது, என்னென்ன அனுபவங்கள் ஏற்பட்டன என்று பரிமாறிக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்வதோடு கதை ஆரம்பிக்கிறது. அப்போதே நமக்கு தெரிந்துவிடுகிறது இது பெண்கள் எப்படி “ஆணாதிக்க” சமுதாயத்தில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரப்போகிறார்கள் என்ற கதையாக இருக்கும் என்று. நான் ஏற்கனவே episode format பிரியன் என்பதால் ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன்.