டில்லியில் நடந்த 1983 ஆசிய விளையாட்டு போட்டியின் போது சுஜாதா எழுதிய இந்த கதை ஒரு காதல் கதை அல்ல. உலகளாவிய பந்தயங்களில் கலந்துக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்த சில விநாடிகளுக்காவே தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கிக்கின்றனர். அவர்களுடைய சிந்தையும், உடம்பும் விளையாட்டையன்றி வேறு எதுவும் யோசிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு பெண் ரசி என்கிற தமிழரசி, தன் கோச் மற்றும் மாமாவான ராஜ்மோகனின் மேற்பார்வையில் உலக சாதனையை நிகழ்த்தும் முயற்ச்சியில் இருக்கிறாள். இடையில் ரிப்போர்ட்டர் மனோ மூலம் அவள் மனதில் காதல் நுழைகிறது. ராஜ்மோகனின் அளவுகடந்த கண்டிப்பும், சாதனை நிகழ்த்தும் முனைப்பும் காயப்படுத்தியிருந்த தமிழரசியின் மனதுக்கு இந்த காதல் அமிர்தமாக இனிக்கிறது. விளையாட்டிலிருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிடும் மனநிலைக்கு போகிறாள் ரசி. தடுமாறிய ரசியின் விளையாட்டு ஆர்வத்தை மீண்டும் விளையாட்டுக்கு திருப்ப ஒரு பெறும் விலை கொடுக்கப்படுகிறது. மொத்தமே 2-3 நாட்களில் நடப்பதாக எழுதப்பட்ட இந்த நாவல் கீழே வைக்க தோன்றாத அளவுக்கு விறுவிறுப்பாகவும், மனதை தொடுவனவாகவும் உள்ளது. விசா பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள இந்த 104 பக்கங்களும், ரூ. 50/- விலையும் கொண்ட புத்தகம், நிச்சயம் உங்களை கவரும்.