அமரர் கல்கியின் புத்தகங்கள் மிக “voluminous" ஆக உள்ளது / படிக்க நேரமில்லை என்று சொல்லி அவற்றை படிக்காமல், அந்த சுவாரசியமான அனுபவங்களை இழந்த நண்பர்களுக்காக அனன்யா அக்காவின் நண்பர் திரு. பாம்பே கண்ணன் கல்கியின் காலத்தை வென்ற படைப்பான “பொன்னியின் செல்வன்” புத்தகத்தை ஒலிநூலாக (3 DVD தொகுப்பு) வெளியிட்டு இருந்தார். என் அம்மாவுக்காக நான் அதை வாங்கியிருந்தேன். இனிய அனுபவம்... இப்போது அவர் அமரர் கல்கியின் மற்றொரு காவியமான “பார்த்திபன் கனவு” புத்தகத்தை ஒலி நூலாக வெளியிடுகிறார். இதுவும் இனிய அனுபவமாக இருக்கும் என்று உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இந்த படத்தை click செய்து திரு. பாம்பே கண்ணனை அனுகவும்.

பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வனின் penultimate என்று சொல்லக்கூடிய அந்த முக்கிய உச்சக்கட்டங்கள் இந்த ஐந்தாவது பாகத்தில் தான் நடைபெறுகின்றன. நான்கு புத்தகங்களில் வந்த சம்பவங்கள் எல்லாம் இந்த பாகத்தில் வந்து ஒரு புள்ளியில் குவிந்து முழுமை அடைகிறது. கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றபோதும், அவர்களின் நடத்தைகளுக்கு காரணம் கற்பிப்பதாக இந்த பாகம் முடிகிறது. என்ன தான் கற்பனை கதை என்று சொன்னாலும், வரலாற்றை மாற்றுவதாக எழுத முடியாதே. இந்த ஐந்தாம் பாகத்தில் என்ன நடக்கிறது?

பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வனின் நான்காவது பாகம் முடித்து இரண்டு வாரங்கள் ஆனபோதும் இதை பற்றி எழுத சமயம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு நேற்று ஐந்தாவது பாகத்தை ஆரம்பித்துவிட்டேன். நான்காவது பாகத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் முக்கிய கதாபாத்திரங்களான அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், குந்தவை ஆகியோருக்கு கிட்டத்தட்ட வேலையே இல்லாதது தான். மாறாக மற்ற துணைப் பாத்திரங்களான ஆதித்த கரிகாலன், அநிருத்த பிரம்மராயர், ஊமை ராணி ஆகியோரின் பங்கே அதிகம். மேலும் ஒரு புதிய பெண் கதாபாத்திரம் - மணிமேகலை இதில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பொன்னியின் செல்வனின் மூன்றாவது பாகத்தில் சம்பவங்கள் அதிகமென்றால், நான்காவது பாகத்தில் சதிவேலைகளும், சூழ்ச்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகையால் சிற்சில தொய்வுகள் இருந்தபோதும் நான்காவது பாகம் நன்றாகவே நகர்கிறது.

Ponniyin Selvanஒரு நெடிய பயணத்துக்கு கிளம்பும் ரயில் வண்டி ஆரம்பத்தில் மெதுவாக கிளம்பி, தண்டவாளத்தில் பழகிய பிறகு, இனி பயணமே முக்கியம் என்று வேகம் பிடிப்பது போல பொன்னியின் செல்வனின் முதல் இரண்டு பகுதிகளில் கதையின் சம்பவங்களை விட சூழலையும், பின்புலத்தையும் அதிகம் அலசிய பின்பு மூன்றாவது பாகத்தில் கதை வேகம் பிடித்துள்ளது. முதல் இரண்டு பாகங்களை விட இதில் தான் சம்பவங்கள் அதிகம். அதனால் கதை விறுவிறுப்பு கூடியுள்ளது போல தோன்றுகிறது. 1 வாரத்தில் மொத்த புத்தகத்தையும் (3வது பாகத்தை) படித்த எனக்கே சம்பவங்களை மீண்டும் யோசித்து பார்க்கும்போது சில காட்சிகள் விட்டுப்போகும்போது, இதனை வருடக்கணக்கில் தொடராக படித்த வாசகர்களின் நினைவு சக்தியை பாராட்ட தோன்றுகிறது. எனினும் இந்த பதிவில் மூன்றாம் பாகத்தின் கதையை சுருக்கமாக summarise செய்ய முயற்சிக்கிறேன்.

Ponniyin Selvan - 2கடந்த வார இறுதியில் பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகத்தை வெற்றிகரமாக படித்து முடித்ததும் இவ்வளவு சீக்கிரமாகவா என்று தோன்றியது? பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகம் படிப்பது ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' பார்ப்பதற்கு சமம். படிக்கும் நாமும் அந்த இயற்கையில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துவது. கோடிக்கரையின் மணல்வெளிகளும், கடலின் நுரையலைகளும், மரங்களும், புதர்களும் நம் மீது உரசுவது போன்ற effect - ஐ உணரலாம். இம்முறை கதை 10௦% தமிழக கடற்கரையிலும், 30% தஞ்சை அரண்மனையிலும், மீதி 60௦% இலங்கை காடுகளிலும் நடக்கிறது. அதனால் இந்த பாகத்தில் இயற்கையின் பங்கை வாசகர்கள் உணரலாம். மேலும் இந்த பாகத்தில் தமிழ் அரசர்கள் இலங்கை அரசியலின் மீது ஏற்படுத்திய பாதிப்பையும், தமிழ் வரலாற்றுடனான நெருக்கத்தையும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் கல்கி.

Ponniyin Selvanகடந்த சில வாரங்களில் அடுத்தடுத்த தஞ்சை பயணங்கள், அதுவும் அந்த இடங்களோடு நெருக்கமாக இருசக்கர வாகன பயணம்..... அதை தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே “பொன்னியின் செல்வன்” படிக்க ஆரம்பித்துவிட்டதால் திடீரென்று தஞ்சையோடு ஒருவித பூர்வீக பந்தம் இருப்பது போல ஒரு உணர்வு. குறிப்பாக இம்முறை “பொன்னியின் செல்வன்” படிக்கும்போது (கடந்த முறையைவிட) இன்னும் அதிக பரிச்சயம் தோன்றியது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் அதில் திருவையார் குறித்த வர்ணனைகள் வரும்போது உண்மையாகவே திருவாரூர் சாலைகள் நினைவுக்கு வந்தன. நான் என்ன சொல்லவருகிறேன் என்பது “பொன்னியின் செல்வன்” படிக்கும் / படித்தவர்களுக்கு புரியும்.

பொன்னியின் செல்வன்நவீன கால தமிழ் இலக்கியத்தின் முக்கியமான மைல்கல் இந்த ‘பொன்னியின் செல்வன்’. நான் 4-5வது படிக்கும்போது என் அம்மா இதனை படித்து காண்பித்தார். அப்போதே என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. எனினும் இதனை நான் அபுதாபிக்கு போனபிறகு தான் படிக்க முடிந்தது. ஐய்யோ..! வெறும் எழுத்துக்கள் மூலமே நம் மனக்கண்ணில் இப்படி பழங்கால தமிழகத்தையும், வளமான வாழ்க்கையையும், ராஜதந்திரங்களையும் விறுவிறுப்பாக கொண்டு வந்து நிறுத்தமுடியுமா? என்று பிரமிப்பு தான் வந்தது. இந்த பிரமிப்பில் எனக்கு ‘பொன்னியின் செல்வனின்’ நிறைகுறைகள் எதையும் சீர்தூக்கி கூட பார்க்கத்தோன்றவில்லை. இன்னும் சொல்லபோனால் இந்த புத்தகம் படிக்க படிக்க என் மனத்திரையில் படமாக விரிந்து ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் நான் மீண்டும் அதிகமாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்ததற்கு அபுதாபியில் படித்த ‘பொன்னியின் செல்வனும்’ ஒரு முக்கிய காரணம். அபுதாபியில் இருந்து திரும்பி வந்தபோது நான் பெற்ற இன்பம் என் தமிழ் நண்பர்களும் பெறட்டும் என்று அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். மீண்டும் படிக்க ஆரம்பித்தபோது 1 மாதத்திற்குள்ளாக 5 பாகங்களையும் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் படிக்க ஆரம்பித்தேன்.