Cigaretteதம்மட்டிக்காம தண்ணியடிக்காம வாழ்க்கையிலே எண்ணத்தை சாதிச்சோம்னு சில சமயம் தோனறதுண்டு. ஒரு தடவை என் தங்கச்சி அவ பிரெண்டு கிட்டே சொன்னா "அவன் வேஸ்ட்டு.. தண்ணி தம்மு அடிக்க மாட்டான்". ஒரு காலத்துல எதை வாழ்க்கையிலே உத்தமமான குணம்னு நினைச்சேனோ அது இப்போ கையாலாகாதத்தனம்னு படுது. தண்ணி அடிக்கிறதை இது வரைக்கும் ஒருத்தர் கூட பெருமையா சொன்னதில்லை.. ஆனாலும் தண்ணி தம்மு அடிக்கிறவங்க எண்ணிக்கை மட்டும் exponential-ஆ தான் வளருது. மனசு கஷ்டமா இருந்தா (ஒரு வேளை தண்ணி அடிக்க பழகியிருந்தா) ஒரு குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்து தூங்கியிருக்கலாம். இப்படி உங்களை எல்லாம் Blog எழுதி கொல்லாம இருந்திருக்கலாம். ஆபீஸ்ல சக ஊழியர்கள் கூட வார இறுதிகள்ல ஜோதியிலே ஐக்கியம் ஆகி "நல்ல Team member"நு சீக்கிரமா பேர் எடுத்திருக்கலாம். ஏனோ நான் Out of sync-ல வளர்ந்ததால எனக்கு பக்கத்துல யாராவது தொடர்ந்து 2 சிகரெட் புடிச்சாலேயே அவங்க மேலேயே வாந்தி எடுத்துடுவேன்.

Crazy Mohanஇந்த தீபாவளி அன்று சேனல் மாற்றிக்கொண்டிருந்த போது டி.டி-யில் கிரேஸி மோகனின் பேட்டி ஓடிக்கொண்டிருந்தது. கமல்ஹாசனுடனான தனது திரையுலக பயணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார். தமிழ் நாடகவுலகத்துக்கு கிடைத்த ஒரு அற்புதமான பொக்கிஷம் இவர். பொதுவாக கத்தி கத்தியும், உடல் அபிநயத்தாலுமே பலர் நகைச்சுவையை முயற்சித்துக்கொண்டிருக்க, இவர் அசால்ட்டாக வார்த்தைகளாலேயே அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார். அதுவும் மீட்டருக்கு மேலாக. நிமிஷத்தில் நூறு நகைச்சுவையை அடைத்துக்கொடுப்பார் இவர். அத்தனை ஜோக்குகளும் நமக்கு புரியவேண்டும் என்றால் பத்து தடவை கேட்டிருக்கவேண்டும். அவருடைய திரையுலக பிரவேசம் மற்றும் பயணம் கமல்ஹாசனோடு மட்டுமே இருந்திருக்கிறது. அவர் கமல்ஹாசன் அல்லாமல் ஒன்றிரண்டு படங்களில் பணிபுரிந்து இருந்தாலும் அவை வெற்றி அடையாததால் அவர் கமல்ஹாசன் “exclusive" என்பது போல ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. இரவென்று ஒன்று இருந்தால் பகல் என்று இருக்கவேண்டும் அல்லவா? மாஸுக்கு ரஜினி என்றால் க்ளாஸுக்கு கமல் இருக்கவேண்டுமே... சுஜாதாவுக்கு ஒரு பாலகுமாரன். அது போல தமிழ் நாடக உலகத்தில் கிரேஸிக்கு இணையாக பேசப்பட்டது எஸ். வி சேகர் தான்.

Lady Auto Driverஇன்னைக்கு கடலூர்ல இருந்து பாண்டிக்கு போக பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பும்போது யதேச்சையாக ஒரு பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணிக்க நேர்ந்தது. நான் கடலூரில் பார்த்த முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண் தான். அந்தப்பெண் ஷேர் ஆட்டோவுக்கு பதிலாக சவாரி ஆட்டோவாக எங்களை அழைத்து சென்றிருந்தாலும் நாங்கள் கேட்ட பணத்தை கொடுக்க தயாராக இருந்தோம். எனக்கு அவரை பார்த்ததும் சந்தோஷப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று புரியவில்லை. கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் இந்த தொழிலில் ஆணுக்கு நிகராக இந்த பெண்ணும் வந்திருக்கிறாரே என்று சந்தோஷப்படுவதா இல்லை இப்படிப்பட்ட கஷ்டமான வேலைக்கு வரும் அளவுக்கு பொருளாதாரரீதியான கஷ்டம் அவரை செலுத்தியிருக்கவேண்டும் என்ற ஆதங்கமும் தோன்றியது. எது எப்படியோ, அந்தப்பெண்ணுக்கு வாழ்க்கை வண்டி நல்லபடியாக ஓடவேண்டும் என்று பிரார்த்திக்க தான் தோன்றியது. கடலூரில் இப்போது மூன்று பெண்கள் ஓட்டுகிறார்களாம். இந்தப்பெண் ஐந்து வருடங்களாக ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறாராம். எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது.

இன்னைக்கு “ஜெயா மேக்ஸ்” சேனல்ல “கண்ணுக்குள் நிலவு” பாட்டு பார்த்தேன். அந்த பாட்டுல ஊட்டியில வழக்கமா ஷூட்டிங் எடுக்குற ஷூட்டிங் மேட்டுல எடுத்த போர்ஷன் பார்த்தப்போ என் கவனம் அந்த ஒத்த மரத்துல போய் நின்னுச்சு. அவ்ளோ பரந்த புல்வெளியிலே இந்த ஒத்த மரம் மட்டும் பயங்கர வசீகரமா ஸ்டைலா நிக்கும். முதல் முதலா ரோஜா படத்தில் வந்த “புது வெள்ளை மழை” பாட்டுல தான் அந்த மரத்தை கவனிச்சேன். என்னடா இது காஷ்மீர் மாதிரியும் இல்லை ஆனா மணிரத்னம் ஏமாத்த மாட்டாரேன்னு நினைச்சேன். அப்புறமா இந்த மரத்தை மஞ்சு வாரியர் நடிச்ச மலையாள படமான “Summer in Bethlehem” படத்துல வந்த “சூல மடிச்சு..”ன்னு தொடங்குற பாட்டை கவனிச்சப்போ இது ஊட்டி தான்னு தெரிஞ்சுது. ஆனா 2003-ல் ஊட்டி போனப்போ தான் இந்த மரம் வழக்கமான ஷூட்டிங் மேட்டுல இருக்குன்னு தெரிஞ்சுது. அந்த மரத்தை பார்த்ததும் எனக்கு செம பரவசம் - ஏதோ நான் வணங்குற தெய்வத்தையே நேர்ல பார்த்த மாதிரி ஒரு நெகிழ்ச்சி. அந்த மரத்தை புடிச்சுகிட்டு புதுசா வெட்கப்படுற ஹீரொயின் மாதிரி கன்னத்தை இழைச்சுகிட்டு சுத்தி சுத்தி வந்தேன். அந்த மேட்டுல, கிட்டத்தட்ட 2-3 சதுர கிலோமீட்டர் பரப்புல இது ஒரு மரம் மட்டும் தான் இருக்கும். Sunset-ல இந்த மரம் தனியா நிக்கறதை பாக்கும்போது ஏதோ ஒருவித சோகம் நம்மை வந்து தொத்திக்கும். அதுக்கப்புறம் ஊட்டியிலே எடுத்த எந்த பாட்டா இருந்தாலும் என் கண் அந்த ஒத்த மரத்தை மட்டுமே தேடும்.

Phoneஎன் முன்னாள் பாஸ் ஒருமுறை சொன்னார் - “உனது ப்ளாகுகளை படித்துவிட்டு உன்னை சந்திப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும்”. காரணம் - நான் எழுதுவதை படித்துவிட்டு நான் நிறைய பேசுபவன் என்று வாசகர்கள் எண்ணக்கூடும். ஆனால் எனக்கு ஃபோன் செய்தீர்களானால் நிச்சயம் கியாரண்டியாக அடுத்த 2-3வது நிமிடத்தில் உங்கள் வேலையை தொடர போய்விடலாம். ஃபோனில் மணிக்கணக்கில் பேசுபவர்களை கண்டால் எனக்கு ஒரு வித பிரமிப்பு தான் தோன்றும் - பேசுவதற்கு இவ்ளோ விஷயங்கள் இருக்கிறதா என்று. எனக்கோ நேரடியாக விஷயத்துக்கு வரவேண்டும். அது குறித்து பேசி முடித்தவுடன் - வேறு என்ன பேசுவது என்று தெரியாது. “அப்புறம்....”, “வேற என்னடா?” போன்ற கேள்விகள் கொஞ்சம் அலர்ஜி தான். அதுவும் அந்த கேள்விகள் தொடர்ந்து வரும் பட்சத்தில் நான் அம்பேல். குறிப்பாக பழைய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பேசும்போது தொடர்ந்து ரெண்டு பக்கமும் மாத்தி மாத்தி “அப்புறம்”... “வேற..” வரும்போது எப்போதுடா பேச்சை முடிப்பாங்கன்னு இருக்கும். என்னையும் மதிச்சு ஃபோன் பண்ணியிருக்காங்க, என் கிட்டே இன்னும் கொஞ்ச நேரம் பேசனும்னு ஆசைப்படுறாங்கன்னு தெரிஞ்சாலும் என்னால வெட்டியா மொக்கை போட முடியலையே! எனக்கு நல்லா தெரிஞ்ச விஷயம் பத்தி கேளுங்க... மணிக்கணக்குல லெக்சர் எடுக்குறேன். இல்லைன்னா எனக்கு புதுசான விஷயத்தை சொல்லுங்க... நான் எவ்ளோ நேரம்னாலும் கேட்டுக்குறேன்... ஆனா ரெண்டு தடவை “அப்புறம்”.. “வேற என்ன விஷயம்?” வந்தா ஃபோனை கட் பண்ணிக்குறதை தவிர எனக்கு வேற வழி தெரியலை. அதுக்காக நான் திமிர் புடிச்சவன் இல்லை... என்னால முடியலை!!! நான் ஒரு நல்ல ‘conversationalist" கிடையாதுங்குறது என்னுடைய வட்டத்தில் எல்லாருக்கும் தெரியும். எனக்கு புடிச்ச சில விஷயங்கள் தவிர்த்து மற்ற விஷயங்கள் என்னால பேச முடியாது. அதனால நான் வெறுமனே உளறிகொட்டுறதை விட அமைதியா இருக்குறதே உத்தமம்னு நினைக்கிறவன். என் பொண்டாட்டி கூட என்னை திட்டி, குதறி பாத்துட்டா... எனக்கு தான் மொக்கை போட வரமாட்டேங்குது. நான் என்ன வச்சுகிட்டா வஞ்சனை பண்றேன்? அதே மாதிரி எதிர் முனையிலே பேசுறவங்களும் எப்போ ஒருத்தர் “அப்புறம்..”, “வேற..”ன்னு தினறுராங்களோ, அப்போவே பேச்சை கட் பண்ணினாங்கன்னா மரியாதை / அன்பு குறையாம இருக்கும்ங்குறது என்னோட அபிப்பிராயம். இல்லைன்னா ”திமிர் புடிச்சவன், பேசமாட்டேங்குறான்”, “சரியான தத்தி..”ன்னு அனாவசியமான எதிர்மறையான அபிப்பிராயங்கள் வந்து உறவை பங்சர் பண்ணிடும்.

தீபாவளி நரகாசுரன் செத்ததுக்காக கொண்டாடப்பட்டதா இல்லை ராமர் அயோத்திக்கு திரும்ப வந்ததுக்காக கொண்டாடப்பட்டதாங்குற காரணம் எதுக்குங்க? ஒவ்வொரு தீபாவளியும் நமக்கு சந்தோஷமா போச்சா? அவ்ளோ தான். எனக்கென்னவோ முன்னாடி மாதிரி இப்போ தீபாவளி அவ்வளவு சந்தோஷமா கொண்டாடப்படுறது இல்லைன்னு ஒரு அபிப்பிராயம். என்னடா இவன்... “எங்க காலத்துல”ன்னு பெருசுங்க போல ஆரம்பிக்குறானேன்னு பயப்படாதீங்க, நான் ”யூத்” இல்லைன்னாலும் அவ்ளோ ”பெருசு” இல்லை. தீபாவளின்னாலே விடிய காலையிலே எழுந்து சீயக்காய் வச்சு, எண்ணெய் தேய்ச்சு குளிச்சு, அம்மா கையால மஞ்சள் வச்ச புதுத்துணி வாங்கி போட்டுகிட்டு தீபாவளி வந்துடுச்சுன்னு கட்டியம் கூறுர மாதிரி ஒரு சரவெடி போட்டு, வெளிச்சம் வந்தா மத்தாப்பு நல்லா தெரியாதுன்னு அவசரம் அவசரமா 2 டப்பா மத்தாப்பு காலி பண்ணி, வெளிச்சத்துல நம்ம டிரெஸ் எப்படி இருக்குன்னு பார்த்துகிட்டு, பக்கத்து வீட்டு பிள்ளைங்க கிட்டே “இது தான் உன் தீபாவளி டிரெஸ்ஸா?”ன்னு பார்த்து (சில சமயம் மனசுக்குள்ளே சின்ன பொறாமையோடு) ஒப்பிட்டுக்கொண்டு, அம்மா செய்த தீபாவளி பலகாரங்களை சம்புடங்களில் போட்டு தர பக்கத்து வீடுகளுக்கு கொண்டுப்போய் கொடுத்துவிட்டு வந்து, தேங்காய் அரிசி மாவு அடை - கறிக்குழம்பு என்ற தீபாவளி ஸ்பெஷலை முடித்துவிட்டு, விடிய்ற்காலையில் நேரமே எழுந்தது கண்ணை அழுத்த, கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு மாலையில் (தீபத்துக்கு என்று கொஞ்சம் ஒதுக்கப்பட்ட பிறகு மீதி) பட்டாசு எல்லாத்தையும் காலி செய்து தீபாவளி முடிஞ்சுது என்பதை அறிவிக்கும் விதமாக பட்டாசு குப்பைகள், வெடிக்காத பட்டாசுகள் என எல்லாவற்றையும் கொளுத்து முடிக்கும்போது “இனி அடுத்த வருஷம் தான்” என்ற ஏக்கம் தான் மிஞ்சும். இப்போ டி.வியிலே சினிமாக்காரன் / சினிமாகாரிகளின் இளிப்பு, சினிமா இவற்றுக்கு இடையே கிடைத்த கொஞ்ச நேரத்தில் பிள்ளைகள் பட்டாசு வெடித்துவிட்டு கடமையாக டி.வியில் ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள். விடுங்க... இது தமிழனின் சாபம் (கலாநிதி மாறன் குடும்ப உபயம்)... இதை நினைக்கிறதை விட உங்களுடன் சில தீபாவளிகளின் நினைவை பகிர்ந்துக்கலாம்.

Homosexualsவலைமனையில் எழுதுவதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் - நமது கருத்தை ஒத்துப்போகும் / வெட்டிப்போகும் நபர்களின் நட்பு கிடைக்கும். சில வருடங்களுக்கு முன்பு ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த பதிவை படித்துவிட்டு ஒரு நண்பர் பதில் அனுப்பினார். கல்லூரி முடித்திருப்பதாக சொன்னார் "நீங்கள் Brokeback Mountain பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டிருந்தார். அதில் இரு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இடையேயான உறவை சொல்லியிருப்பார்கள் என்றும் "ஓரினச்சேர்க்கை பாவம் அல்ல" என்றும் எழுதியிருந்தார். "ஒருவருடைய sexuality என்பது தனி மனிதர்களின் விருப்பம்... அதை சரி என்றும் தவறு என்றும் சொல்லும் உரிமை எனக்கு இல்லை... அந்த விவாத நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டதாக நம்பிய இளைஞரை குறித்து எனக்கு தோன்றியதை எழுதினேன்" என்றும் சொன்னேன். மேலும் ஓரினச்சேர்க்கையை வெறுக்கவோ / ஆதரிக்கவோ செய்யும் அளவுக்கு எனக்கு அது பற்றிய ஆழமான அபிப்பிராயம் எல்லாம் கிடையாது. ஆனால் ஓரினச்சேர்க்கை உறவால் வாழ்க்கையின் பிற்பகுதியில் எந்த ஒரு பயனும் இல்லை என்பது எனது கருத்து. பிறகு வழக்கமாக எனது பதிவுகளை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக்கொள்வார்.

Radioரொம்ப நாள் ஆச்சு... பதிவு எழுதி! இந்த காலகட்டத்துல என்னோட கூகுள் ரேங்க் எல்லாம் கீழே இறங்கி போனதை கூட கவனிக்க முடியாத அளவுக்கு சமயப்பற்றாக்குறை. அப்படி என்ன வெட்டி முறிக்கிறேன்னு கேக்காதீங்க... அப்புறம் அழுதுடுவேன்... ஆமாம்! முன்னாடி எல்லாம் எதை பார்த்தாலும், படிச்சாலும் என்னோட நண்பர்கள் கிட்டே (அது நீங்க தாங்க) பகிர்ந்துக்கணும்னு எழுதுவேன்... கொஞ்ச நாளா மரத்துப்போச்சு. திரும்ப எழுதணும்னு நினைக்கிறப்போ என்ன எழுதறதுன்னு தெரியலை. சந்தியா கிட்டே சொன்னப்போ அவங்க "ரேடியோ" பத்தி எழுதுங்களேன்னு கரு எடுத்து குடுத்தாங்க. அதை டெவலப் பண்ணி உங்ககிட்டே பகிர்ந்துக்குறேன்.