Letting it go

Relationships
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அது எனது பொறியியல் கல்லூரியின் கடைசி காலம்.. அப்போது ஒரு நண்பன் மீது உயிராக இருந்தேன். ஆனால் சில காரணங்களுக்காக அவனும் நானும் பேசிக்கொள்ளாமல் இருந்தோம். அவன் வேறொரு நண்பனோடு நெருக்கமாக, அவர்களை ஒன்றாக தினமும் வகுப்பில் காணவேண்டிய நிலைமை. இந்த வருடம் எப்போது முடியும் என்று தினமும் கடனேயென கழித்துக்கொண்டிருந்தபோது கல்லூரியில் ஒரு சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அது முக்கியமாக கம்ப்யூட்டர் மாணவர்களுக்கு. ஆனால் அன்று நிறையபேர் மட்டம் போட்டுவிட்டதால் இடத்தை நிரப்ப எங்கள் வகுப்பிலிருந்து அழைத்துப்போய் அங்கே இருக்கைகளை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். சொற்பொழிவின் முடிவில் யாரேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று சொன்னார் அந்த பேச்சாளர்.

நான் தயக்கத்துடன் எழுந்து நான் சில விஷயங்களை மறக்கவேண்டும் என்று நினைத்து நினைத்து அந்த விஷயங்களை இன்னும் அதிகமாக நினைவுபடுத்திக்கொண்டு கஷ்டப்படுத்திக்கொள்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில்  "நீ எல்லா விஷயங்களையும் நினைவு வைத்துக்கொள்ளவேண்டும் என்றால் கூட்ஸ் வண்டி போல விஷயங்கள் சேர்ந்துக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் உன்னால் இழுக்கமுடியாமல் முன்னேற முடியாமல் போய்விடும். அதனால் அவ்வப்போது தேவை இல்லாத விஷயங்களை கழற்றிவிட்டுவிடு. நீ உனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக நினைத்தால் நீ முன்பு யாருக்கு அநியாயம் செய்திருக்கிறாய் என்று சமாதானப்படுத்திக்கொள். யாரோ உன்னை கஷ்டப்படுத்தியது போல நீ யாரையேனும் கஷ்டப்படுத்த்யிருப்பாய். அதனால் எதை எங்கே வைக்கவேண்டும் என்று முக்கியத்துவத்துக்கேற்ப வரிசை ஒதுக்கு " என்று சொன்னார். அதை அப்போது உடனடியாக பழக்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் பிற்காலத்தில் ஓரளவுக்கு கடைபிடிக்க ஆரம்பித்தேன்.

என்னை போன்ற ஆட்களுக்கு பிரச்சனை என்னவென்றால் எளிதாக பல விஷயங்களை ஒதுக்கிவிட முடியாது. எதையும் மனதுக்கு நெருக்கமாக கொண்டுபோய்விடுவோம். பிடித்தால் மட்டுமே செய்வோம், பிடித்தால் மட்டுமே பழகுவோம், பிடிக்கவில்லை என்றால் எவ்வளவும் முக்கியமானவர்களாக இருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் கண்டுக்கொள்ளவே மாட்டோம். மனதுக்கு எவ்வளவு நெருக்கமாக கொண்டுபோகிறோமோ அதை ஒதுக்கவேண்டும் என்றால் மிகவும் கஷ்டம். ஒரு விஷயத்தை பிடிக்க ஒரு சில நொடிகள் போதும் ஆனால் அதை மறக்க / ஒதுக்க வருடங்கள் பிடிக்கும். கடந்த பல வருடங்களாக இப்படி தேவையில்லாத சுமைகளை இழுத்து இழுத்து ஓய்ந்து போனபோது எனக்கு அந்த பழைய சொற்பொழிவு நினைவுக்கு வந்தது.

ஞானோதயங்கள் அரச மரத்தடியில் மட்டும் தான் கிடைக்கவேண்டும் என்று இல்லை.. குடும்பத்தை விட்டு தனியாக சில காலம் இருந்தால் கூட வரலாம். முதல் ஞானம் - பொருட்கள் சம்பந்தப்பட்டது. பலமுறை சாலையோர குடிசைகளில் இருப்பவர்களை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். "எப்படி இவர்கள் இப்படி குறைந்த இடத்தில் குறைவான பொருட்கள் கொண்டு வாழ்கிறார்கள்? ஒருவேளை இவ்வளவு தான் இருக்கிறது, இதை வைத்து தான் காலத்தை ஓட்டவேண்டும் என்ற சலிப்புடன் வாழ்வார்கள் போல என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்று மாதக்கணக்கில் வசிக்கும்போது நம் வீட்டில் எது எது எல்லாம் முக்கியம் என்று கருதி பாதுகாத்தோமோ அது எல்லாம் இல்லாமல் நமக்கு தேவையான் வெறும் Basics மட்டும் கொண்டு வாழும்போது, வெளியூரில் வாங்கிய பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு வரும்போது I learnt to let go of the attachment with the materials.

நமக்கு பிடித்தவர்களிடையே மனஸ்தாபமோ, சண்டையோ வந்தால் நாம் அவர்களிடையே சிக்கிக்கொண்டு படும்பாடு இருக்கிறதே.. இவர்களுக்கும் பரிந்து பேசமுடியாமல், அவர்களையும் கண்டிக்கமுடியாமல் மாட்டிக்கொண்டு முழிப்பது ஒரு கொடுமை என்றால், நம்முடைய ஒவ்வொரு சொல்லும் நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடு பார்க்கப்படுவது நிச்சயம் நம்மை சோம்பல் ஆக்கும். பல வருடங்களுக்கு பிறகு அனைவரையும் விடுதலை செய்ய கற்றுக்கொண்டேன். உறவுகள் என்பது சம்பந்தப்பட்ட இரு தனிமனிதர்களுக்கு இடையே உள்ள விஷயம். இதில் மூன்றாவது ஆள் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது. சம்பந்தப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டால் மத்தியஸ்தம் பண்ணலாம்.. இல்லை நமது சார்பற்ற கருத்துக்களை கூறலாம். அதைவிட்டுவிட்டு இந்த பிரச்சனையை கொண்டு மனதை குழப்பிக்கொள்வது என்பது முட்டாள்த்தனம் என்று உணர்ந்தபோது I let my relations go.

இன்றே நிஜம்.. இக்கணமே உண்மை. கடந்த காலத்தில் என்னவேண்டுமானாலும் நடந்திருக்கலாம். நமக்கு தவறு இழைக்கப்பட்டிருக்கலாம்... இல்லை நாம் தவறு செய்திருக்கலாம். என்னால் அவ்வளவு எளிதாக கடந்த காலத்திலிருந்து வெளியே வரமுடியாததால் கடந்த காலத்தில்  "ஏன் அப்படி செய்தோம்?" என்று நொந்துக்கொண்டிருந்தது எந்த விதத்திலும் உதவவில்லை. மாறாக பிரச்சனைகளை அதிகமாக்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள்   "நடந்துடுச்சு.. இப்போ என்ன?" என்று எதிர்த்து யோசிக்க, கடந்த காலத்தை விட்டொழித்து I let the past go.

ஒவ்வொருவருக்கும் தம்மை சுயபரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியாவது தனிமை படுத்திக்கொள்வது அவசியம் என்று கருதுகிறேன். தனிமை என்றால் குடும்பத்தினரோ இல்லை உறவினர்களோ அல்லது நண்பர்களோ உடன் இல்லாத தனிமை. அப்போது தான் நம்முடைய support system மற்றும் priorities-ஐ ஆராய்ந்து உணர முடியும். எல்லாவற்றுக்கும் மேலே எதையாவது கடந்து போகவேண்டுமென்றால் அதைப்பற்றி நமக்குள்ளே உறுத்திக்கொண்டிருப்பதை வெளியே யாரிடமாவது பேசி வெளியே கொட்டிவிடவேண்டும். எப்படியேனும் வெளியே கொட்டலாம்... நெருங்கியவர்களிடம் பேசலாம், இல்லை மனோதத்துவ நிபுணர்களிடம் உரையாடலாம்... இல்லை இப்படி ப்ளாக் கூட எழுதலாம்.