Malayalam
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒழிமுறி

ஒழிமுறி - விவாகரத்துக்கு மலையாளத்தில் விவாகமோசனம் என்ற வார்த்தை இருந்தபோதும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (தற்போதைய நாகர்கோவில் / கன்யாகுமரியுடன் இணைந்த பகுதி) ‘ஒழிமுறி’ என்ற உள்ளூர் பதம் பிரயோகப்படுத்தப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு உயரிய மதிப்பு மட்டுமல்ல, சமூக அமைப்பில் இயல்பாகவே அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரம் என்றால் சொத்துரிமை மட்டுமல்ல, தனது திருமணத்தை தொடர முடிவு எடுக்குமளவுக்கு அனுமதி. இந்த திருமணத்தை தொடர விருப்பமில்லை என்றால் ஒரு வெற்றிலைத் துண்டை / வெற்றிலைப்பெட்டியை திண்ணையில் வைத்து கணவனை வெளியேற்றும் அளவுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் பெற்றவர்கள் நாயர் பெண்கள். இந்த பின்புலத்தில் ஆண், பெண்ணுக்கிடையே நடைபெற்ற war of sexes-ஐ மனம் தொடும் விதமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

குழித்துறை நீதிமன்றத்தில் அந்த வித்தியாசமான வழக்கு விசாரனைக்கு வருகிறது. 71 வயதான தாணுப்பிள்ளையை அவரது 55 வயதான மனைவி மீனாட்சி அம்மாள் விவாகரத்து செய்வதாக வழக்கு தொடுக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மாள் தாணுப்பிள்ளைக்கு எழுதி வைத்த சொத்துக்களை திரும்ப கோருகிறார். இந்த வழக்கில் மீனாட்சி அம்மாளுக்கு துணையாக அவர்களது மகன் சரத் என்கிற சிவன் பிள்ளை வழக்கு நடக்கும் தினங்களில் வருகிறான். தாணுப்பிள்ளைக்கு ஆதரவாக வாதாடும் பாலா இந்த வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே  முடித்துக்கொள்ள முன்வைக்கிறாள். ஆரம்பத்தில் அவளை சந்தேகப்படும் சரத் மெல்ல மெல்ல அவள் மீது நம்பிக்கை வைத்து தன் வாழ்வில் நடந்தவற்றை - ஏன் தன் தந்தையை வெறுப்பதாக சொல்ல, படம் ஃப்ளாஷ்பேக்கில் விரிகிறது.

கதை விரிய விரிய கண்ணால் கண்டதும், காதால் கேட்டதும் பொய் என்று சரத்துக்கு தெரிய ஆரம்பிக்கிறது. கடைசியில் நீதிமன்றத்தில் நடக்கும் கிளைமேக்ஸில் படம் அழுத்தமாக, அர்த்தமாக முடிகிறது.

எந்த ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கும் அது உருப்பெற அவன் வளரும் சூழ்நிலைகளே காரணம். தாணுப்பிள்ளையின் தாய் காளிப்பிள்ளை ஒரு கடைந்தெடுத்த அதிகாரம் பெற்ற நாயர் பெண்மணி. பெண்கள் பேசவேண்டும் ஆண்கள் கேட்கவேண்டும் என்று தன் மறுமகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மேலும் பெண்கள் யானையைப் போல தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அப்படியே வாழ்ந்தும் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் தன் கணவனை திண்ணையில் வெற்றிலை வைத்து விவாகரத்து செய்து வீட்டைவிட்டு வெளியேற்றியும் விடுகிறார். வயிற்றில் அடிபட்டு தன் தந்தை தனிமையில் துடிதுடித்து அனாதையாக இறந்தது தாணுப்பிள்லைக்கு பெண்கள் பற்றிய பார்வையை மாற்றிவிடுகிறது. இதனால் தன் வாழ்க்கையை பெண்கள் கையில் கொடுத்துவிடக்கூடாது என்று அடுத்த சாதியில், வசதியில்லாத வீட்டில் பெண் எடுத்து தனது கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார். அதன் காரணமாக மனைவி மீனாட்சி அம்மாளுக்கு அடியும் உதையும் தாராளமாக கிடைக்கிறது.

படத்தின் மிகப்பெரும் பலம் எழுத்தாளர் ஜெயமோகனின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் தான். ஜெயமோகன் நாகர்கோவிலை சேர்ந்தவர் என்றும், மறைந்த மலையாள இயக்குநர் லோகிததாஸின் நண்பர் என்றும், லோகிததாஸின் படமான ”கஸ்தூரிமான்” மூலம் திரைக்கதாசிரியராக அறிமுகமானார் என்பது தெரிந்த விஷயம் என்றாலும், முழு மலையாள படத்துக்கும் இவ்வளவு அழுத்தமான வசனங்கள் எழுதமுடியும் என்று என்னை ஆச்சரியப்படுத்துகிறார் ஜெயமோகன். அவர் பிறந்து வளர்ந்த நாகர்கோவிலிலேயே, அவரை சுற்றியுள்ள மக்களை வைத்து, அவர்களது தமிழும் அல்லாது கேரளத்திலும் அல்லாத கலாச்சார குழப்பத்தை என அற்புதமான documentation-ஆக படத்தை கொடுத்திருக்கிறார். படம் முழுவதும் ஒரு தரமான நாவலை வாசித்தது போன்ற திருப்தி.

நெஞ்சை தொடும் வசனங்கள் படம் நெடுக.. உதாரணம் -
பாலா: இவர்களுக்கு சந்தோஷமாக வாழ வழியில்லையா?
சரத்: மனிதர்களுக்கு அடுத்தவர் மீது எப்போதும் பயம். அதனால் தான் எப்போது அடுத்தவர்களை ஆள முயற்சிக்கிறார்கள். இந்த வெற்றி பெற எந்த அளவுக்கும் போவார்கள் மனிதர்கள்.

மற்றொரு காட்சியில் அவனது தாயாரிடம் சரத் கேட்கிறான் - ஏன் இவ்வளவு வேதனையுடன் அவருடன் வாழ்ந்தாய்? தனியாக வந்தால் உனக்கு தைரியமாக வாழத்தெரியாதா?
மீனாட்சி அம்மாள்: அளவுகடந்த அன்பு வன்முறையை தூண்டக்கூடியது. உறவில் வன்முறை வேண்டாம் என்றால் அன்பையும் வேண்டாம் என்று ஒதுக்கவேண்டும். அது (அன்பை ஒதுக்குவது)அவ்வளவு எளிதானது அல்ல.

எனினும் என்னை அசைத்த அந்த தருணம் என்னவென்றால் கிளைமேக்ஸில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சி. வேலைக்காரர்கள் செய்வது சேவகம், கடமை. அது அன்பு இல்லை. அன்பு என்பது சேவகத்தோடு கூடியது அல்ல. அந்தஸ்துள்ள மனிதர்களாக, ஒரு சுயமரியாதையுடன்,  dignity-யுடன் அன்பு செலுத்தவேண்டும். அப்போது தான் அன்பு முழுமை பெறும் என்ற கருத்துடன் படம் முடியும் காட்சி.

படத்தின் அடுத்த பலம் அதன் நடிகர்கள் தேர்வு. தாணுப்பிள்ளையாக லால் அற்புதம். இந்த அவார்டு சீசனில் மனிதர் விருதுகள் வாங்கியே களைத்துவிடுவார். மீனாட்சிப் பிள்ளையாக வரும் ‘ஆட்டோகிராப்’ மல்லிகாவுக்கு இது life time role. அந்த டப்பிங் குரல் அவரது நடிப்பை இன்னும் அதிகமாக மெருகேற்றியிருக்கிறது. காளிப்பிள்ளையாக ஸ்வேதா மேனன்... வடக்கில் (கொஞ்சம் வயதான பிறகு கதாநாயகியாகி கலக்கும்)வித்யா பாலன் போல, மலையாளத்தில் ரொம்ப லேட்டாக வந்து நடிப்பு ராட்சஸியாக பின்னியெடுத்து இருக்கிறார் ஸ்வேதா மேனன். அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியிலும், இறக்கும் காட்சியிலும் அவரது body language.... ஆஹா!!! பாலாவாக பாவனாவும், சரத்தாக ஆஸிப் அலியும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சிறிய இடைவெளியில் லாவகமாக பொருந்தியிருக்கிறார்கள்.

அதே நாகர்கோவிலில் இருந்து வந்த ஒளிப்பதிவாளர் அழகப்பன் நாகர்கோவிலையும், கன்யாகுமரியையும், களியாக்காவிளையையும், குழித்துறையயியும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி செல்லுலாயிட்டில் சுருட்டியிருக்கிறார். பிஜிபாலின் இசை functional.

இது நடிகராக இருந்து இயக்குநரான மதுபாலுக்கு இரண்டாவது படம். தனக்கு கிடைத்த அழகான கதையை சிதைக்காமல் முடிந்த அளவுக்கு அழகாக, இயல்பாக இயக்கியிருக்கிறார். ஜெட் வேகத்தில் பறக்கும் கதை இல்லையென்றாலும் அது மெதுவாக நடந்தாலும் இழுவையாக தோன்றமுடியாத அளவுக்கு கொண்டுபோயிருக்கிறார்.

படம் நெடுக எனக்கு எனது பெற்றோரின் திருமண வாழ்க்கை ஒவ்வொரு காட்சியிலும் நினைவுக்கு வந்தது. எனது பார்வையில் அவர்களுடையது ஒரு வெற்றிகரமான திருமணம் அல்ல. ஒரு கட்டத்தில் நானே என் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன் - “பேசாமல் நானே உங்களுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்துவிடட்டுமா? கடைசி காலத்தையேனும் நிம்மதியாக கழிக்கலாமே?” என்று. எனினும் அவர்கள் ஒன்றாக இருக்க, அவர்களது நடவடிக்கைகளுக்கு ஏதோ காரணம் இருக்கும் என்று ஆழமாக நம்பினேன். அதனால் தான் நான் முடிந்த அளவுக்கு side எடுக்காமல் இருவரையும் balance செய்துக்கொண்டிருந்தேன். சமயத்தில் தனித்தனியாக இருவரிடமும் எனக்கு திட்டு கிடைக்கும் ”நீ அவர் / அவள் செய்வதை தட்டிக்கேட்பது இல்லை” என்று. ஆனால் இந்த படம் பார்த்தபோது நான் கண்டதும் / கேட்டதும் மட்டும் உண்மை அல்ல என்ற எனது நம்பிக்கைகள் பலப்பட்டுவிட்டது. என்றேனும் எனது பெற்றோர்களை ஒன்றாக அமர்த்தி ‘ஒழிமுறி’ பார்க்கவைத்து அவர்களுடைய reactions-ஐ பதிவு செய்யவேண்டும்.

ஒழிமுறி - பொழுதுபோக்கிற்காக பார்க்கப்படும் வணிகரீதியான படம் இல்லை. ஒவ்வொரு நொடியையும், ஓரோர் shot-ஐயும் ரசிக்கும் தரமான ரசிகர்களுக்கானது. நீங்கள் எப்படி என்று முடிவு செய்துவிட்டு, ‘ஒழிமுறி’யை பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

Related Articles