Sujatha
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Kanthaloor Vasanthakumaran Kathaiநான் படித்த சுஜாதா எழுதிய முதல் வரலாற்று புதினம் இது. தலைவர் மொத்தமே இரண்டு வரலாற்று நாவல்கள் தான் எழுதியிருக்கிறார் போல. இந்த நாவலை பற்றி பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ எனக்கு இந்த நாவலை பற்றிய ஓரளவுக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. அது பூர்த்தி அடைந்ததா என்று கேட்டால் பதில் அவ்வளவு திருப்தியாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். பொன்னியின் செல்வன் முடிந்த சில காலங்களுக்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் இதில் வருகின்றன. அதனால் நாம் பொன்னியின் செல்வனில் பார்த்த ராஜராஜ சோழனுக்கும், இதில் வரும் ராஜராஜ சோழனுக்கும் நிறைய வித்தியாசங்கள். மேலும் இதிலும் ராஜராஜ சோழன் கதாநாயகன் இல்லை. மாறாக பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் போல இதிலும் ஒரு ‘வ’ தான் கதாநாயகன் - வசந்தகுமாரன்.

கையில் இருந்த பணத்தை எல்லாம் சூதாட்டத்தில் தொலைத்துவிட்ட வசந்தகுமாரன் யவன (Greek) வீரன் ஒருவனிடம் குதிரைகளை வாங்கி விற்று லாபம் பார்க்கலாம் என்ற ஆசையில் யவனனின் மரணம் மண்ணை அள்ளி போடுகிறது. அது போதாதென்று வசந்தகுமாரன் மீது கொலை முயற்சியும், அதை தொடர்ந்து ராஜதுரோக பழியும் விழ, அவனை காப்பாற்ற அவனது நண்பரும், குருவுமான கணேச பட்டர் களத்தில் இறங்குகிறார். கடைசியில் அந்த கொலைப்பழியை நீக்கி எப்படி ராஜராஜசோழனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறான் என்பது தான் மீதி கதை. ஊடே ராஜராஜ சோழனின் சகோதரன் மகளான அபிமதிக்கும் வசந்தகுமாரனுக்கும் காதல் வருகிறது.

வழக்கமாக ராஜராஜசோழனை (குறிப்பாக பொன்னியின் செல்வன்) பற்றி படித்தவர்களுக்கு இதில் வரும் ராஜராஜசோழனின் image கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தும். பொ.செ - வில் வானதியுடனான அருண்மொழி வர்மனின் காதல் இதில் பதினைந்து மனைவிகளில் ஒன்றாக போவதும், பொ. செ-வில் அக்கா மீதும், பெண்கள் மீதும் அபரிதமான மரியாதை கொண்ட ராஜராஜ சோழன் இதில் தன் சகோதரன் மகளை பலவந்தமாக சாளுக்கியனுக்கு பல தாரங்களில் ஒருத்தியாக அவள் விருப்பமின்றி மணம் முடித்து வைக்க ( ofcourse அரசியல் காரணங்களுக்காக) முயற்சிப்பதும் பொ. செல்வன் படித்தவர்களுக்கு ஏனோ ஒட்டவே ஒட்டாது. மேலும் தரணி புகழும் தஞ்சை கோவிலின் கட்டுமானத்துக்கு பின்னணியில் இருந்த கட்டாய நில கையகப்படுத்துதல், செலவுகளை சமாளிக்க பத்து மடங்கு உயர்த்தப்பட்ட இரையிலி (வரி) என புதிய கண்ணோட்டத்தில் பிரகதீஸ்வரர் கோவிலை பார்க்க வைக்கிறார் சுஜாதா.

நாவலின் ஆரம்பத்தில் கல்கியும் சாண்டில்யனும் எழுதிய வரலாற்று கதைகளை template-ஆக கொண்டு அடுத்து எழுதிய எல்லாரும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி எழுதுகிறார்கள். அதை உடைக்கவே தான் வித்தியாசமான எழுத்து நடையை பயன்படுத்தியதாக சொல்லியிருக்கிறார். சுத்த தமிழ் நடை என்ற போதும் கல்கி அளவுக்கு எளிமையாக இல்லாமல் சுஜாதா நிறைய ‘complex' வார்த்தைகளை போட்டு எழுதியிருப்பதால் அவரது நாவல்களை படிக்கும் வழக்கமான வேகத்தில் படிக்க முடியவில்லை. அடுத்து அவரது ‘கணேஷ் - வசந்த்’தின் பாதிப்பு (பெயர்கள் கூட கணேசபட்டர் - வசந்தகுமாரன்) மிக மிக அதிகம். அதனால் ஒரு contemporary novel-ஐ வரலாற்று பின்னணியில் எடுத்து ‘வைத்துவிட்டது’ போன்ற உணர்வு.

அடுத்து இதில் loose ends அதிகம். உ.ம் - சாளுக்கியன் சதி செய்வதாக அறிந்தும் அவன் அடுத்து என்ன ஆனான்? சதியாலோசனையின் முக்கிய பங்காளியான நீலவண்ணனின் பங்கு வெளியான பிறகு ராஜராஜ சோழன் ஏன் / என்ன நடவடிக்கை எடுக்கவில்லை? நீலவண்ணன் ஆரம்பத்தில் அவ்வளவு பிரமாதமாக திட்டங்கள் எல்லாம் போட்ட பிறகு மீண்டும் ஏன் ராஜராஜசோழனை கொல்ல முயற்சிக்கவில்லை?, அபிமதி வந்தபிறகு அவளை யாரும் தேட முயற்சிக்காதது, சம்பிரதாயமாக முடிக்கப்பட்ட வசந்தகுமாரன் - அபிமதி திருமணம் என அரைகுறையாக முடிந்துவிட்டது போன்ற நிறைய ஏன், ஏன்கள்.

மறைந்த நண்பர் வைத்தி இந்த நாவல் வெளியான போது (அப்போது நாங்கள் அபுதாபியில் இருந்தோம்) இதை வாங்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார். அவர் மறையும் முன்பு இதை படித்தாரா என்று தெரியவில்லை ஆனால் இந்த நாவலை எப்போது பார்த்தாலும் எனக்கு அவர் ஞாபகம் வரும். ஒருவகையில் இந்த நாவலை படிக்க இவ்வளவு நாட்கள் பிடித்ததும் அது தான் காரணம். கடைசியாக இந்த நாவலை படிக்க தூண்டியது அவர் சகோதரர் அருண் தான். கடந்தவாரம் எனக்கு அழைத்தபோது ‘காந்தளூர் வசந்தகுமாரன்’ படித்துக்கொண்டிருப்பதாக சொன்னார். என்னையும் படிக்க சொன்னார். ஒருவழியாக என்னுடைய (வைத்தி) apprehensions-ஐ ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே முச்சாக படித்து முடித்தேன். அதனால் இந்த பதிவு அருணுக்கும், வைத்திக்கும் சமர்ப்பணம்.

புத்தக விவரம்:-
பதிப்பாளர்கள்: உயிர்மை பதிப்பகம், அபிராமபுரம், சென்னை - 60018 போன்: +91-44-24993448
பக்கங்கள்: 213
விலை: ரூ. 130/-