Yandamoori Virendranath
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Marmadesamகிட்டத்தட்ட 90-களின் பிற்பகுதியில் - சன் டி.வி வீடுகளில் காலூன்ற ஆரம்பித்த சமயம் - cable TV connection இருந்த நகர்ப்புறங்களையும், டவுன்களையும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட முக்கால்வாசி தமிழகத்தை வியாழக்கிழமைகளில் பயமுறுத்தி முடக்கிய “பெருமை” கே.பாலசந்தரின் “மின் பிம்பங்க”ளுக்கும், இந்திரா சௌந்தர்ராஜன் - நாகா கூட்டணிக்கு மட்டுமே உண்டு. அவர்களது கைவண்ணத்தில் உருவான “மர்மதேசம்” தொடர் மூலம் தமிழக வாசகர்களின் முதுகுத்தண்டை உறையவைத்துக்கொண்டிருந்தது. முதலில் வந்த “ரகசியமாய் ஒரு ரகசியம்” ஒரு நாயை கொண்டு பயமுறுத்திக்கொண்டிருந்தது என்றால் அடுத்து வந்த “விடாது கருப்பு” ஒரு குதிரையை வைத்து தமிழ் நேயர்களை முடக்கிக்கொண்டிருந்தது. கடந்த முறை புத்தகங்கள் வாங்க போனபோது இது “விட்டுவிடு கருப்பா” என்ற பெயரில் புத்தகமாக பார்த்தேன், வாங்கினேன்.

தமிழில் ஆன்மீக த்ரில்லர்களை எழுதுவதில் இந்திரா சௌந்திரராஜனை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. எனவே இந்த “விட்டுவிடு கருப்பா” படித்து “விடாது கருப்பு” தினங்களை மீண்டும் வாழ ஆசைப்பட்டேன். நாடகத்தின் காட்சிகள் நிறைய ஞாபகம் இல்லாததால் படிக்கும்போது பெரிய “குறுக்கீடுகள்” இல்லை. எனினும் படிக்கும்போது காட்சிகள் மீண்டும் மனத்திரையில் விரிந்தது. ஆனால் “புத்தக கருப்பு”க்கும் ”டிவி கருப்பு”கும் நிறைய வித்தியாசம் இருந்தது. இந்த புத்தகத்தின் 75% சம்பவங்கள் டி.வி தொடரில் வந்திருந்தது. ஆனால் கடைசி 25%-ல் நிறைய மாற்றங்கள் செய்து முடிவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரம் தான் கருப்பு என்று முடித்திருந்தார்கள்.

மதுரையை அடுத்த தோட்டக்காரமங்கலத்தில் வசிக்கும் ஆனைமுடித்தேவரின் மகள் ரத்னாவை அவளது சக ஊழியரான டாக்டர் அரவிந்த் காதலிப்பதாக சொல்கிறான். ஆனால் ரத்னாவோ அவளது குலதெய்வமான கருப்பிடம் உத்தரவு கிடைத்தால் தான் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பேன் என்று சொல்லி விட்டு தோட்டக்காரமங்கலத்துக்கு அவளது தோழியான ரீனாவுடன் வருகிறாள். இந்த நிகழ்வுகளுக்கு பின்னணியில் மனித சதி இருப்பதாக ரீனா சந்தேகித்து துப்புதுலக்க ஆரம்பிக்கும்போது பல சகுன தடைகள், அசம்பாவிதங்கள் என பல எச்சரிக்கைகள். பின்னர் ரத்னாவின் சகோதரனான ராஜேந்திரனும் ரீனாவை காதலிப்பதாக சொல்ல, ரீனாவும் சம்மதம் தெரிவிக்கிறாள். பின்னர் ராஜேந்திரன் மற்றும் அரவிந்த்தின் மீது கொலை முயற்சிகள் நடக்க, ரீனா வெற்றிகரமாக கருப்பு குறித்த மர்மத்தை அவிழ்க்கிறாள்.

பொதுவாக புத்தகங்கள் திரைவடிவம் பெறும்போது புத்தகத்தின் தாக்கம் போல திரைப்பதிவு இல்லை என்ற குற்றச்சாட்டு வழக்கமாக எழும். ஆனால் முதல் முறையாக புத்தகத்தை விட திரைப்பதிவு தான் அற்புதமாக இருந்தது. Call it co-incidence - இந்த நாவலை நான் படிக்கவேண்டும் என்று நினைத்த சமயத்தில் சந்தியாவும் இந்த நாவலை படித்துவிட்டு புத்தகம் குறித்து ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் அவர் “விடாது கறுப்பு” மற்றும் “விட்டுவிடு கருப்பா”வின் கதாபாத்திரங்கள் அவர்களின் பாத்திரப்படைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் என விலாவாரியாக எழுதியிருந்தார். நான் இந்த நாவல் குறித்து என்னவெல்லாம் சொல்லவேண்டும் என்று நினைத்தேனோ எல்லாவற்றையும் அவரே சொல்லிவிட்டார். இந்த ”மர்மதேசம் - விடாது கருப்பு” நாடகத்தை யாரோ ஒரு புண்ணியவான் Dailymotion இணையதளத்தின் ஏற்றிவைத்திருக்கிறார். அதை தொகுத்து எனது வலைமனையின் Videos பகுதியில் போட்டுவைத்துள்ளேன். பார்த்து களியுங்கள்!!!

புத்தக விவரம்:
பதிப்பாளர்கள்: திருமகள் புத்தக நிலையம், வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 17
பக்கங்கள்: 384
விலை: ரூ. 96/-