Miscellaneous
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Appusami and Seethapatti'பாக்கியம்' ராமசாமி உருவாக்கிய அப்புசாமி 1980-களில் வாசகர்களுக்கு மிகப்பிரியமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஒன்று. கிட்டத்தட்ட தமிழ் ‘டாம் & ஜெர்ரி' வகை நகைச்சுவை தான். எப்போது பார்த்தாலும் சீதா பாட்டியிடம் திட்டு வாங்கி கட்டிக்கொள்ளும் அப்புசாமி தாத்தா, அவரது துணைவர்களான ரசகுண்டு, பீமாராவ் என எப்போதும் கலகலப்புக்கு பஞ்சமில்லாத கும்பல் இது. பல நாவல்களிலும், தொடர்களிலும் கடந்த தலைமுறை வாசகர்களை மகிழ்வித்த அப்புசாமி தாத்தாவும், சீதாப்பாட்டியும் தற்போது புத்தகங்கள் வாயிலாகவும், நகைச்சுவை டி.வி.டி-களிலும், இணையத்தில் ‘http://www.appusami.com' என்ற முகவரியிலும் இந்த தலைமுறை வாசகர்களை தங்கள் பக்கம் கவர முயற்சித்து வருகிறார்கள். இந்த இணையதளத்தில் இருந்து படித்த தொடர் / நாவல் - ‘அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும். இதை நான் Amazon Kindle-க்கு ஏற்ப மின் புத்தகமாக உருமாற்றியுள்ளேன்.


பா.மு.க (பாட்டிகள் முன்னேற்ற கழகம்) தலைவி சீதாபாட்டியிடம் வழக்கம்போல திட்டு வாங்கிக்கொண்டு அதன் காரணமாக தாடியை எடுக்காமல் சீதே கிழவியுடன் 9 விருந்துகளில் தின்ற பிறகு தான் தாடியை எடுப்பேன் என்று சபதம் எடுக்கிறார் அப்புசாமி. இந்த தாடியின் காரணமாக ஆப்பிரிக்க இளவரசி இடீலி அப்புசாமி தாத்தா மீது காதல் கொள்கிறாள். அவரையே தனது லுலூண்டா-வாகவும், லுபோண்டா-வாகவும் வரித்து அப்புசாமியை வளைத்து வளைத்து காதல் செய்கிறாள் இளவரசி இடீலி. அவரை மணந்துக்கொள்ள முடிவெடுத்து சீதா பாட்டியிடம் சாம / தான / தண்ட / பேதம் என பலவழிகளையும் பிரயோகித்து கடைசியில் மணமேடை வரை சென்றுவிடுகிறாள். இதற்கு சீதாப்பாட்டியின் பரம வைரியான கீதாப்பாட்டியும் இடீலி பக்கம் துணைநிற்கிறாள். கடைசியில் சீதாப்பாட்டி அப்புசாமி தாத்தாவை மீட்டாரா, மீண்டும் அவர்கள் வாழ்க்கையில் காதல் மலர்ந்ததா என நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் ‘பாக்யம் ராமசாமி.

இந்த நாவலை / தொடரை படிக்க ஆரம்பிக்கும் நமக்கு ‘துணுக்குத்தோரண‘த்தனமான எழுத்துநடை பழக கொஞ்ச நேரம் பிடிக்கிறது. அது பழகியவுடன் தலைமுறை வித்தியாசத்தை தாண்டி அப்புசாமி & கோ அடிக்கும் லூட்டியும், சீதா பாட்டி அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் முறையும் சுவாரசியமாக இருக்கிறது. அப்புசாமி தாத்தா ஒவ்வொரு முறையும் கேணத்தனமாக ஏதாவது செய்துவைக்க அது ஏதாவது ஒரு விபரீதத்தில் சென்று சிக்குவதும், அதிலிருந்து அவரை சீதாப்பாட்டி மீட்டெடுப்பதும் நல்ல கோர்வையாக எழுதப்பட்டுள்ளது. இளவரசி இடீலியின் காதல் மொழிகளும், டூயட் என்கிற பெயரில் அவர்கள் அடிக்கும் லூட்டிகளும் சிரிப்பை வரவழைக்கும் ரகம்.
இடீலியும், சீதாப்பாட்டியும் அப்புசாமிக்காக நகர்த்தும் காய்களும், இவர்களுக்கிடையே பகடைக்காயாக அப்புசாமி படும் பாடும் சுவாரசியமே.

சுஜாதா, பாலகுமாரனுக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்களான ‘பாக்யம்‘ ராமசாமி, சாவி ஆகியோரின் நகைச்சுவை கதைகளை இந்த தலைமுறை வாசகர்கள் அதிகம் தெரிந்திருக்கவில்லை என்பது எனது அபிப்பிராயம். சுஜாதா / பாலகுமாரன் போல சீரியஸான எழுத்துக்கள் இவை இல்லை என்றபோதும் அவற்றை படிப்பதும் ஒரு தனி அனுபவமே. பழைய லெண்டிங் லைப்ரரியிலோ அல்லது புத்தக கடைகளிலோ தேடிப்பாருங்கள். ‘பாக்யம்‘ ராமசாமி அப்புசாமி பெயரில் நடத்தும் இணைய தளத்தில் சென்று படித்துப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் அப்புசாமி தாத்தாவும், சீதா பாட்டியும் புது அங்கத்தினர்களாக நுழையலாம்.

இந்த அப்புசாமி தளத்திருந்து சில தொடர்களை ‘Copy' செய்து அவற்றை E-Book reader-ல் படிக்கக்கூடிய ‘mobi' வடிவத்தில் மாற்றியுள்ளேன். இணையத்தில் Amazon Kindle-ல் படிப்பதற்கு ஏதுவாக தமிழ் புத்தகங்களே இல்லை. ’MobiRead' என்ற தளத்தில் ஒரு நண்பர் முரளி பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் மின்புத்தகமாக மாற்றி பதிவிறக்கத்துக்கு அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட தமிழின் முதல் மின்புத்தகங்கள் அவை தான் என்று சொல்லலாம். அவரை பின்பற்றி நான் ‘அப்புசாமி' தொடரின் பல பாகங்கள் மற்றும் சில புத்தகங்களை மின்புத்தகமாக மாற்றியுள்ளேன். எனது வசதிக்காக உருவாக்கப்பட்ட அந்த புத்தகங்களை எந்த வியாபார நோக்கமும் இன்றி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு சந்தோஷமே. நீங்களும் ஏதாவது தமிழ் மின்புத்தகங்களை (MOBI / EPUB) உருவாக்கியிருந்தாலோ, அல்லது உங்களுக்கு வேறு யார்மூலமாகவோ கிடைத்திருந்து அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்பினாலோ, எனக்கு ஒரு மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும். அவற்றை கட்டாயம் மற்றவர்களோடு பகிர நானும் உதவுகிறேன்.

{jd_file file==4}