Kalki
Typography

Ponniyin Selvan - 2கடந்த வார இறுதியில் பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகத்தை வெற்றிகரமாக படித்து முடித்ததும் இவ்வளவு சீக்கிரமாகவா என்று தோன்றியது? பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகம் படிப்பது ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' பார்ப்பதற்கு சமம். படிக்கும் நாமும் அந்த இயற்கையில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துவது. கோடிக்கரையின் மணல்வெளிகளும், கடலின் நுரையலைகளும், மரங்களும், புதர்களும் நம் மீது உரசுவது போன்ற effect - ஐ உணரலாம். இம்முறை கதை 10௦% தமிழக கடற்கரையிலும், 30% தஞ்சை அரண்மனையிலும், மீதி 60௦% இலங்கை காடுகளிலும் நடக்கிறது. அதனால் இந்த பாகத்தில் இயற்கையின் பங்கை வாசகர்கள் உணரலாம். மேலும் இந்த பாகத்தில் தமிழ் அரசர்கள் இலங்கை அரசியலின் மீது ஏற்படுத்திய பாதிப்பையும், தமிழ் வரலாற்றுடனான நெருக்கத்தையும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் கல்கி.

இந்த இரண்டாம் பாகத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களை கதைக்குள் நுழைக்கிறார் கல்கி. ஓடும் புள்ளிமானாக, ஒரு live wire - ஆன, இந்த புத்தகத்தின் உயிர்ப்புள்ள பாத்திரங்களின் ஒன்றான பூங்குழலியை ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திவிடுகிறார் கல்கி. கடலில் துள்ளி விளையாடும் சமுத்திரக்குமாரியாய், தென்றலை போல அழகாக நடைபயின்றும், புயலை போல வேகமாக தாவி ஓடியும் துருதுறுப்பின் மொத்த வடிவமாக நம் முன் இறங்கும் பூங்குழலியை நமக்கு பிடித்துப்போக காரணம் எதுவும் தேவை இல்லை. ஆணுக்கு நிகராக பொங்கும் கடலில் துடுப்பு தள்ளும் லாவகமும், காட்டுக்குள் மான்குட்டியாக சாரா சரவென ஓடும் ஓட்டமும், வந்தியத்தேவனை கேலி செய்யும் குறும்பும், அவ்வப்போது அவனை சிக்கலில் மாட்டிவிட்டு பின்னர் மீட்கும் இளகியமனசும்... இப்படிப்பட்ட பெண்ணின் மீது நமது வல்லவரையனும், இளவரசரும் (படிக்கும் நாமும் தான்) காதல் கொண்டதில் வியப்பில்லை.

அடுத்து இந்த கதையின் பெயர் காரண நாயகனான 'பொன்னியின் செல்வன்' என்றழைக்கப்படும் இளவரசன் அருள்மொழி வர்மர் கிட்டத்தட்ட பாதி புத்தகத்தில் தான் அறிமுகமாகிறார். ஆனால் அறிமுகமானது முதல் மற்ற கதாபாத்திரங்களை பின்னுக்கு தள்ளி படிப்பவர் மனதில் உயர்ந்து வியாபிக்கிறார். எனினும் எனக்கு இந்த பாகத்திலும் பிடித்தது என்னவோ வல்லவரையன் வந்தியத்தேவன் தான். என்னை பொறுத்தவரை 'பொன்னியின் செல்வன்' நாவலின் கதாநாயகன் எப்போதும் வந்தியத்தேவன் தான். காரணம் என்னவென்று யோசித்தால் - அருள்மொழி வர்மர் கதாபாத்திரம் very perfect & idealistic - ஆக படைக்கப்பட்டிருப்பதும், வந்தியத்தேவன் கதாபாத்திரம் சற்று துறுதுறுவென ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் சாதாரண & இயல்பான மனிதனாக படைக்கப்பட்டிருப்பதும் தான் என தோன்றுகிறது.

அடுத்து வருபவர்கள் - ஊமை ராணி மந்தாகினியும், முதல் அமைச்சர் அநிருத்த பிரம்மராயரும். இவர்களில் ஒரு வித பரிதாபத்தோடும், இளவரசரை நிழலாய் தொடர்ந்து அவரை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும் சாமர்த்தியத்தாலும் நம் மனதில் பதிவது ஊமை ராணி மந்தாகினி தான். அவருக்கும் இளவரசருக்கும் இடையேயான பந்தம் இளவரசரின் தந்தையான சுந்தர சோழரின் மூலமே இந்த பாகத்தின் முதல் பாதியில் சொல்லப்படுகிறது. அதனால் இந்த கதாபாத்திரத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க சிறு குழந்தை கூட போதும்.

சரி.. இந்த பாகத்தில் என்ன நடக்கிறது? பெரிய பழுவேட்டரையரின் ஆட்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு குந்தவை கொடுத்த ஓலையை எடுத்துக்கொண்டு இலங்கைக்கு கிளம்புகிறான் வந்தியத்தேவன். அங்கே பூங்குழலியின் அறிமுகம் கிடைக்கிறது. அவள் வல்லவரையனை தன பின்னால் ஓடவிட்டு புதைகுழியில் சிக்கவைத்து விளையாடுகிறாள். வந்தியத்தேவனுக்கு கடலை கடக்க ஒரு படகோட்டியின் துணை அவசியமாகிறது. வேறு வழியில்லாமல் பூங்குழலியிடம் கெஞ்சி கூத்தாடி அவளை சம்மதிக்க வைக்கிறான். பழுவேட்டரையரின் ஆட்கள் வந்தியத்தேவனை பிடிக்க நெருங்கும் தருவாயில், பூங்குழலியின் சமயோசிதத்தால் வல்லவரையன் தப்பித்து, இருவரும் இலங்கைக்கு புறப்படுகின்றனர். வழியில் ஆழ்வார்க்கடியானும் சேர்ந்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஒரு செய்தியோடு இளவரசரை நோக்கி பயணிக்கின்றனர்.

இந்த சூழலில் தஞ்சையில் சுந்தரச்சோழர் தன் இளம்பிராயத்தில் தான் ஒரு காடுவாசிபெண்ணுக்கு செய்த துரோகத்தையும், அது தன்னை இன்னும் பின் தொடர்ந்து வருவதையும், அந்த பெண் தன்னை ஆவியாய் வந்து அலைக்கழிப்பதாக குந்தவையிடம் சொல்லி பாவமன்னிப்பு கேட்கிறார்.

அங்கே இலங்கையில் ஒரு எதிர்பாராத சூழலில் இளவரசரின் அறிமுகம் கிடைக்கிறது. இளவரசரின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாகிறான் வந்தியத்தேவன். அங்கே இளவரசரின் உயிரை பறிக்க நடக்கும் சில முயற்சிகளையும், அதிலிருந்து இளவரசர் ஊமைச்சியால் காப்பாற்றப்படுவதையும் பார்க்கிறான் வந்தியத்தேவன். இளவரசரை தன்னை முதலில் வந்துப் பார்க்குமாறு குந்தவையும், ஆதித்த கரிகாலரும் தனித்தனியே செய்தி அனுப்பியுள்ளனர். அதே சமயம் இளவரசரை கைது செய்து அழைத்துவர பழுவேட்டரையர்கள் கப்பற்படையை நிறுத்தியிருப்பதை பூங்குழலி கண்ணால் பார்த்ததாக தெரிவிக்கிறாள். முதலில் தன் தந்தையையே பார்க்க விரும்புவதாக இளவரசர் பழுவேட்டரையர்கள் அனுப்பிய கப்பலை நோக்கி கிளம்புகிறார். தன்னுடன் பூங்குழலியை மட்டும் அழைத்து செல்கிறார். அவளுடன் ஒன்றாக கழிக்கும் அந்த இரவில் இளவரசர் அந்த கரையர் மகளுடன் தன் மனது சென்றிருப்பதை உணர்கிறார்.

இதை ஒருவாறாக உணரும் சேனாதிபதி பூங்குழலியை கடிந்து கண்டித்து அனுப்பிவிட, மனிதர்களை பார்க்கவே பிடிக்காமல் ஊழிக்கூத்தில் தாண்டவமாடும் கடலலைகளின் நடுவே ஒடுங்கிக்கொள்கிறாள். அதே சமயம் இளவரசரை கைது செய்துக்கொண்டு செல்லும் கப்பல் என்று நினைத்து வந்தியத்தேவன் மந்திரவாதி ரவிதாசனிடம் சென்று சிக்கிக்கொள்கிறான். உண்மை அறிந்து அவனை மீட்க செல்லும் இளவரசரும் ஊழிக்காற்றில் சிக்கிக்கொள்கிறார். யதேச்சையாக அங்கு வரும் பூங்குழலி இந்த இருவரையும் மீட்டு கரை சேர்ப்பதுடன் இரண்டாம் பாகம் முற்றுப்பெறுகிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் இலங்கையின் இயற்கை எழிலையும், அங்கே புத்த மதம் தழைத்து வளர்ந்ததையும், இலங்கையின் அரசியல் வரலாற்றையும் அழகாக, சமயத்துக்கேற்ப அளவான தகவல்களுடன் சுவாரசியமாக கொடுத்திருப்பதில் கல்கியின் கடின உழைப்பு தெரிகிறது. இன்று ரணகளமாக இருக்கும் இலங்கைக்கு இவ்வளவு அழகான பாரம்பரியம் உள்ளதா என்று படிப்பவர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் தகவல்களுடன் கதைக்கு கதையுமாக, தகவல்களுக்கு தகவல்களுமாக என அறிவு செறிந்து கொண்டுபோயிருக்கிறார் கல்கி. அதனால் தான் எனக்கு இந்த பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களிலும் இரண்டாவது பாகம் தான் மிக சுவாரசியமானது என்று தோன்றுகிறது.

இன்னும் மூன்றாவது பாகத்தை படிக்க ஆரம்பிக்கவில்லை. இந்த வார கடைசியில் ஆரம்பிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன். ஆரம்பித்தால் என் தங்கை சொல்வது போல "மற்ற வேலைகள் எல்லாம் அதோ கதி தான்". இதற்கிடையில் தமிழில் மேலும் சில மின்-புத்தகங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன். கூடிய சீக்கிரம் அவற்றை எல்லாம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

{oshits} வாசகர்கள் இந்த பதிவை படித்துள்ளனர்!!!

Related Articles/Posts

சத்யன் அந்திக்காடின் ‘அர்த்தம்... இயக்குநர்களின்  வயதை அவர்களின் சமீபத்திய படத்தை வைத்து அறிந்துக்கொள்ளல...

Thirakkadha... {mosimage}Thirakkadha (Screenplay) is quite an apt title that 'we ...

Pachaikili Muthucharam...... {mosimage}'Amma! Shall we go to the movie today....''mm......

Ullam Kavar Kalvan - A real ka... Ullam Kavar Kalvan (The thief who stole my heart)… a nice word to desc...

சரஸ்வதியின் சபதம்... எழுத்தாளர் / நடிகர் / இயக்குநர் / அரசியல் விமர்சகர் ‘சோ’வின் இந்த நாடக...

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.