Architecture
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Dharasuram Templeதாராசுரம் - தஞ்சையை போலவே எனக்கு ரொம்ப நாள் தண்ணி காட்டிக்கொண்டு இருந்த கோவில். முதல் முறையாக இதன் பெருமையை எனது UK நண்பர் திரு. இயான் வாட்கின்சன் (Ian Watkinson) மூலம் தான் அறிந்தேன். கேரளா சுவரோவியம் (Murals) வகுப்புக்கு இருவரும் சென்றிருந்தபோது எனக்கு சிற்பக்கலையின் மீது ஈடுபாடு உள்ளதை தெரிந்துக்கொண்டு அவர் தாராசுரம் கோவில் பற்றி சொன்னார். அன்றிலிருந்து எனக்கு அந்த கோவிலுக்கு போகவேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. ஒரு முறை தஞ்சைக்கு போகும்போது தாராசுரத்துக்கும் போகவேண்டும் என்று பலமுறை யோசித்து இருக்கிறேன். கடைசியாக தாராசுரம் போனது மிக மிக அழகான அனுபவமாக விரிந்தது. காரணம் - எனது கல்லூரித் தோழன் LMS உடன் போனது தான். அடுத்த நாள் நாங்கள் கங்கைகொண்டசோழபுரத்துக்கும் போனோம். இந்த பதிவு இந்த இனிய பயணத்தை பற்றியது.

{tab=Dharasuram}

தாராசுரம் - கும்பகோணத்துக்கு மூன்று கி.மீ தொலைவில் உள்ள கிராம பஞ்சாயத்து. தனக்குள்ளே ஒரு தன்னிகரில்லாத கலை பொக்கிஷத்தை சுமந்துக்கொண்டு இருக்கிறோம் என்ற பந்தா துளியும் இல்லாமல் எளிமையாக ஒரு High way ஓரத்து கிராமம் போல அமைதியாக இருக்கிறது. அங்கே யாரிடமும் கேட்டாலும் 'ஐராவதேசுவரர் கோவில்' அங்கே இருக்கிறது என்று கைகாட்டுகிறார்கள். UNESCO மற்றும் ASI (Archeological Socitey of India) புண்ணியத்தில் அழகாக வேலியிட்டு, சுத்தமான புல்தரையுடன் காட்சியளிக்கும்போதே மனசுக்குள் சந்தோஷமாக இருக்கிறது.

இந்திரனின் யானையான ஐராவதம் வணங்கிய கடவுள் என்பதால் இங்கு ஈசன் "ஐராவதேசுவரர்" என்று அழைக்கப்படுகிறார். உலகத்துக்கே சாவை தீர்மானிக்கும் யமராஜனுக்கும் தீராத உடம்பு எரிச்சல் வந்தபோது இந்த கோவிலின் தீர்த்தத்தில் நீராடி குணம் பெற்றதால் இதனை 'யம தீர்த்தம்" என்று சொல்கிறார்கள். இந்த கடவுளை ராஜராஜ சோழனும், கரிகால சோழனும் வணங்கி அருள் பெற்றதாக வரலாறு.

இந்த கோவில் தஞ்சை கோவிலின் நடையை (style)-ஐ ஒத்திருந்தாலும், அளவில் தஞ்சை கோவில் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோவிலை விட மிக சிறியது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல சிற்ப விவகாரத்தில் தஞ்சை பெரிய கோவிலுடன் மல்லுக்கு நிற்கிறது இந்த "தென்னிந்திய கோனார்க்". ஒரிசாவில் உள்ள கோனார்க் கோவில் ஒரு ரதம் / தேர் போன்ற உருவத்தில் உள்ளது. தாராசுரம் கோவில் கூட இது போல தேர் வடிவத்தில் தான் உள்ளது. அதனால் தான் இதை தென்னிந்திய கோனார்க் என்று சொன்னேன். இந்த தேர் வடிவம் சிதைந்திருந்ததாம். இதனை ASI தான் மீண்டும் பொருத்தினார்கலாம்.வழக்கமாக கோவில்களில் காணப்படும் தூண்கள் போல அல்லாமல், தாராசுரத்தில் தூண்கள் அத்தனையும் மிக அழகாக, நுணுக்கமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் சொன்னேன் - இந்த கோவில் கலை விரும்பிகளின் கனவு (Art lovers delight). இந்த சின்ன கோவிலையே நாள் முழுக்க நின்று அலுக்காமல் பார்த்தாலும் மலைப்பு தீராது.

என்னை கவனத்தை ஈர்த்த சில சிற்பங்கள் - சிங்க உடம்பு, யானை துதிக்கையும் கொண்ட வித்தியாச மிருகத்தின் வடிவில் செய்யப்பட தூண்கள். எல்லா தூண்களிலும் ஒரே Theme போல ஒரு வட்டத்துக்குள்ளே உருவாக்கப்பட்ட தூண் சிற்பங்கள் - உடம்பை வில் போல வளைத்து நடனமாடும் பெண் (குறத்தி போலும்), அதுபோல மற்றவர்களின் கைகால்களை பிடித்துக்கொண்டு வில்போல வளைந்து நிற்கும் பெண்கள், கர்ப்பிணிக்கு மேல்வயிற்றில் அழுத்தம் கொடுத்து பிரசவம் பார்க்கும் தாதிப்பெண்கள் என கூர்ந்து கவனித்தால் உங்கள் சிந்தையை மயக்கும் சிற்பங்கள் ஏராளம். பின்பு விக்கிபீடியாவில் தேடியபோது அந்த வட்ட Theme - தாமரை தண்டு என்று அறிந்தேன். இந்த சிற்பங்கள் அந்நாளைய தமிழர் வாழ்வை பிரதிபலிப்பதாக உணர்கிறேன். அதுபோல இந்த கோவிலில் மிக நிறைய நடன மங்கைகளின் சிற்பங்கள் உள்ளன. சொல்லப்போனால் இந்த நடன பெண்மணிகள் சிற்பங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் கொஞ்சம்... கொஞ்சூண்டு அலுப்பு தட்டுவதாகவே உள்ளது.

இந்த கோவிலில் புத்த மதம் குறித்த சில குறிப்புகள் உள்ளனவாம். நாங்கள் சென்ற தினத்தில் அந்த புத்த சிற்பங்களை படமெடுக்க ஒரு ஆராய்ச்சி மாணவர் வந்திருந்தார். அம்மன் கோவிலின் பிரகாரத்தில் அமர்ந்து பார்த்தால் எதிரே பிரகாரத்தின் தூண்களின் symmetry - ஒ கொள்ளை அழகு. முட்டாள் தனமாக இம்முறை கிளம்பும்போது கூடுதல் பேட்டரியை கொண்டுபோகாததால், என் கேமிரா "Low Battery" என்று காட்டியபோது தவித்து போய் மிக குறைவாக தான் புகைப்படம் எடுக்க முடிந்தது. அடுத்த முறை இந்த கோவிலுக்கு மீண்டும் வரவேண்டும் என்பதற்கு இதை விட வேறு நல்ல காரணம் கிடைக்குமா?

கோவிலின் எதிரே ஒரு முழுமையாகாத நுழைவாயில் உள்ளது. இந்த ஐராவதேசரின் கோவில் நுழைவு வாயில் மாமல்லபுரம் கோவிலின் நுவைவு வாயில் போல சற்று தாழ்வாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒருவேளை UNESCO அல்லது ASI - இன் அமைப்பாக இருக்கலாம். தாராசுரம் ஐராவதேசுவரர் கோவிலுக்கு மீண்டும் செல்ல ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். இம்முறை நானும் LMS - உம் அவனுடைய இருசக்கர வாகனத்தில் சென்றோம். காவிரி படுகையில் அமைந்த தஞ்சை தரணியின் பசுமையை இது போன்ற பயணத்தில் தான் அனுபவிக்க முடியும் என்று தோன்றியது.

{tab=Gangaikondachozhapuram}

அடுத்த நாள் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு கிளம்பினோம். தாராசுரம் ஒரு திசையில் என்றால், கங்கை கொண்ட சோழபுரம் தஞ்சையிலிருந்து வேறு திசையில் உள்ளது. LMS - இன் நண்பர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கிட்டத்தட்ட 60 கி.மீ தூரத்தில் இருப்பதாக சொன்னார்கள். அதனால் நாங்கள் இன்றும் இருசக்கர வாகனத்திலேயே செல்லலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம். தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கீழப்பழூர் சென்று ஜெயம்கொண்டன் செல்லும் பாதையில் செல்லவேண்டும். கிட்டத்தட்ட திருவையாறு வரை மோசமான சாலை. அதை தாண்டிவிட்டால் கீழப்பழூர் வரை கொஞ்சம் சுமாரான சாலை ஆனால் சாலைக்கு இருபுறமும் மிக அழகாக பச்சை பசும் வயல்கள், மரங்கள் என பயண அலுப்பை குறைக்கும் அம்சங்கள் நிறைந்துள்ளன. சாலையில் போகும்போதே தூரத்தில் இருந்து LMS கைகாட்டிய திசையில் பார்த்தால் "ஊருக்கு நுழையும்போதே ஒரு ஏரி அதன் பிண்ணனியில் தெரிந்த கோவில் கோபுரம்" என மீண்டும் சோழர் காலத்துக்கு போய்விட்டது போன்ற பிரமை.

கங்கை கொண்ட சோழபுரம் - ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் துங்கபத்திர கரை வரைக்கும் சோழ நாட்டை விரிவுபடுத்தியதன் வெற்றி சின்னமாகவும், நிர்வாக காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட நகரம் தான் இது. இது தஞ்சை இடமிருந்து தலைநகர பதவியை எடுத்துக்கொண்டதால், தஞ்சை போலவே இருக்கவேண்டும் என்று நகலெடுக்கப்பட்டதாம். இங்கேயும் தஞ்சையில் உள்ளது போல ஒரு பிரகதீசுவரர் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தஞ்சை பெருவுடையார் கோவிலின் நகல் போல அமைக்கப்பட்ட இந்த கோவில் தஞ்சை அளவுக்கு பிரம்மாண்டம் இல்லை என்றாலும், ஓரளவுக்கு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடனும், வண்ணம் பூசப்பட்டும் உள்ளது. இங்கே கருங்கல் சிற்பங்கள் அதிகமில்லை. மாறாக சுண்ணாம்பு கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்களில் மூலிகை வண்ணம் பூசப்பட்டு உள்ளது.

தஞ்சை கோவில் போலவே இங்கும் இடது மூலையில் அம்மன் கோவில், பின்புறத்தில் பிள்ளையார் கோவில், மற்றும் தஞ்சை கோவில் போலவே உயரமான பிரகாரம் என அழகாக உள்ளது. இங்கு என் கவனத்தை ஈர்த்த சிற்பங்கள் வரிசையில் - வண்ணம் பூசப்பட்ட சிதிலமடைந்த சிவன் சிலை, பால முருகனுக்கு பட்டம் கட்டும் சிவபெருமான், பார்வதியின் சிற்பம் மற்றும் வீணை இல்லாத ஞான சரஸ்வதியின் சிற்பம் ஆகியவை. அப்புறம் அம்மன் கோவிலின் சுவற்றில் அமைந்துள்ள அர்த்தநாரீசுவரர், சிவா விஷ்ணு சிலை ஆகியவையும் அழகு. சிலைகளின் கூர்மை மிகவும் மழுங்கி இது சிதிலமடைந்து வருகிறது என்பதை வருத்தத்துடன் சொல்லிகொள்வது போல இருக்கிறது.இங்கும் நுழைவுவாயில் முழுவதும் முடிக்கப்படாமல் உள்ளது. ஆனால் உள்ளே நுழைந்ததும் கோவிலின் சுத்தமும், அழகான பராமரிப்பும், அமைதியான சூழலும் நம்மை வசீகரிக்கிறது. கோவிலின் வலது பக்கத்தில் சிங்கமுகத்தின் வடிவில் "சிங்கக்கேணி" ஒன்று அமைந்துள்ளது. அங்கே வந்திருந்த சிலர் இந்த கோவிலுக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கும் இடையே ஒரு சுரங்கப்பாதை ஓடுகிறது என்று பேசிக்கொண்டு போனார்கள். இணையத்தில் தேடியபோது அப்படி ஒன்றும் இருப்பதாக தகவல் இல்லை.

கங்கைகொண்ட சோழபுரத்தில் நாங்கள் போன நேரம் பிரகாரம் அடைக்கப்பட்டு இருந்தது. அதனால் கோவிலின் உள்ளே (அதாவது மூலஸ்தானத்திற்கு) போகமுடியவில்லை. முன்பு சொன்னது போல இந்த கோவிலுக்கு மீண்டும் வர ஒரு காரணம் வேண்டுமல்லவா?

திரும்ப வரும்போது அந்த ஏரியின் கரையில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் 'பொன்னியின் செல்வன்' படிக்கவேண்டும் போல தோன்றியது. அதை LMS - டம் சொன்னபோது 'வண்டியை நிறுத்தட்டுமா? கொஞ்ச நேரம் உட்கார்ந்து படிக்கிறாயா?" என்று கேட்டான். அன்று LMS - ஐ அதிகம் வேலை வாங்கிவிட்டோமோ என்ற குற்றபோதம் காரணமாக, “என்னிடம் இப்போது புத்தகம் இல்லை பின்னொரு முறை பார்த்துக்கொள்ளலாம்” என்று விட்டுவிட்டேன்.

{tab=சொந்தக்கதை}

இம்முறை செய்த பயணத்தை எழுதும் முன்பு நான் 12 வருடங்களுக்கு பின்னோக்கி பயணிக்கிறேன். LMS எனது கல்லூரி நண்பன். வெறும் நண்பன் என்று சொல்வதை விட ஒருபடிக்கு மேலே சொல்லலாம். நாங்கள் கல்லூரியின் Study Holidays - களில் ஒன்றாக படிப்பது வழக்கம். எங்களுக்குள்ளே ஒன்றாக படிக்க அந்த அலைவரிசை பொருத்தம் இருக்கிறதே... அது போன்ற ஒரு ஒத்த அலைவரிசை இன்றுவரை எனக்கு வேறு யாரிடமும் கிடைக்கவில்லை. ஒருவேளை அது போன்ற ஒரு அலைவரிசை கொண்ட சகஊழியர் கிடைத்திருந்தால் நான் அலுவலக பணியில் இன்னும் உயரத்தில் சென்றிருப்பேனோ என்னவோ? நாட்கள் செல்ல செல்ல அந்த 20 -21 வயதில் எனக்கு அவன் மீது அன்பு possessiveness - ஆக உருவெடுத்தது தான் பிரச்சனைகளின் ஆரம்பம். எனது மற்றொரு நண்பன் ARM இந்த LMS உடன் நெருக்கமாக, எனது possessiveness காரணமாக நான் அவர்களிடம் கடைசி வருடத்தில் பேசிக்கொள்ளவே இல்லை. அவர்களை தண்டிக்கவேண்டும் என்று தூக்கமிழந்த இரவுகள் ஏராளம்.

மனதில் ஏற்பட்ட வடுக்களை (ஏற்பட்டதோ இல்லை ஏற்படுத்திக்கொன்டதோ) ஆற்ற காலத்தை விட திறமையான வைத்தியன் வேறு யாரும் இல்லை. மெல்ல மெல்ல காயங்கள் ஆற, 7 வருடங்கள் கழித்து அபுதாபியில் இருந்தபோது, மிக குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 'அல் தவீலாவில் இருந்து அபுதாபி சென்ற ஒரு மதியநேர பிரயாணத்தில்" LMS - வீட்டுக்கு அழைத்தேன். "என்னடா உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதா? அதற்கு எங்களை கூப்பிட போன் பண்ணுறியா?" என்று கேட்டான். பின்பு காலப்போக்கில் நாங்கள் சகஜமாக பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்.

இந்த இடைப்பட்ட சமயத்தில் LMS - உம், ARM - உம் இணைந்து தொழில் தொடங்கியுள்ளார்கள். அவர்கள் நிச்சயம் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். எனக்கு தஞ்சைக்கு வந்து LMS உடன் ஒன்றிரண்டு நாட்கள் தனியாக செலவழிக்கவேண்டும், மீண்டும் கல்லூரி நாட்களுக்கு பயணிக்கவேண்டும் என்று கடந்த வருடம் முழுவதும் திட்டமிட்டு 5 முறை தள்ளிப்போய், இந்த வார இறுதியை விட்டால் தனியாளாக LMS - ஐ பிடிக்க முடியாது என்ற கட்டத்தில் தான் இந்த பயணம் நடந்தது.

கடந்த சனிக்கிழமை தஞ்சையில் இறங்கியபோது சில சங்கடங்கள் (apprehensions) இருந்தன. கடந்த முறை LMS - ஐ பொது இடத்தில் வைத்து சந்தித்தபோது ஒரு comfort zone - இல் நான் இருந்தேன். இம்முறை எனது நண்பர்களை, அதுவும் ஒரு காலத்தில் நான் தண்டிக்க நினைத்த நண்பர்களை, மீண்டும் சந்திக்க அவர்கள் இடத்துக்கே போகும்போது ஒருவித சங்கடமா இல்லை குற்ற உணர்ச்சியா என்று சொல்லமுடியாத குழப்பம். ஆனால் அவர்கள் என்னிடம் கல்லூரி நாட்களில் வந்தது போலவே இயல்பாக இருந்தார்கள்.

நாங்கள் ஒன்றாக இருந்த சமயங்களில் LMS சொல்வதுண்டு - "புதுப்புது அர்த்தங்கள்" படத்தை பார்த்தால் எனது நினைவு வருகிறது என்று. அன்று கிட்டத்தட்ட ஒரு "பு.பு.அ" கிளைமேக்ஸ் மௌனமாக எனக்குள்ளே ஓடிக்கொண்டு இருந்தது. 12 வருடங்களாக நல்ல மற்றும் துன்ப நேரங்களில் இணைபிரியாமல் இருக்கும் LMS மற்றும் ARM ஆகியோரை ஒன்றாக பார்த்தபோது எனக்கு பொறாமை இல்லை. வெறும் கேம்பஸ் நட்பு என்று நான் நினைத்த அவர்களது நட்பு இன்று 12 வருடங்கள் தாண்டியும் இருவரும் ஒன்றாக இணைந்து இருப்பதை பார்த்தபோது மனதார சந்தோஷமாக இருந்தது.

ஒருவேளை எனக்கு இவர்களோடு கருத்து வேறுபாடு வந்து பிரியாமல் இருந்திருந்தால் LMS - ஐ M.E அல்லது ஒரு 9 - 6 வேலை என்ற ரீதியில் தான் கொண்டுபோயிருப்பேன். இல்லை மற்ற நட்புக்களை போல வார இறுதியில் ஒரு போன் கால், அவ்வப்போது ஒரு கடிதம் என்று போயிருக்கலாம். இப்படி 24 X 7 கூட இருக்கும் அளவுக்கு பொறுமை எனக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. இப்படி என் மனதில் ஓடிக்கொண்டிருந்த பல என்ன ஓட்டங்களால் ஒரு வித self cautiousness இருந்தது. அதை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக "நாம் ஒன்றாக இருந்தபோது..." என்று conscious - ஆக past tense - இல் பேசிக்கொண்டிருந்தேன்.

LMS was... is... and always will be my love. அவனது திருமண வாழ்க்கை இனிமையானதாக அமைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். And... ARM was a darling. எனக்கு பிடித்த நண்பனுடன் நெருக்கமானான் என்பதை தவிர அவனிடம் கோபித்துக்கொள்ள வேறு காரணம் இல்லை. ஆதித்யா பிறந்தபோது அவனாகவே என்னை மீண்டும் தொடர்பு கொண்டான். உளவியலாளர்கள் சொல்வது போல "நாம் நாமாக இருக்கும் உறவுகளை உடைத்துக்கொண்டு வெளிவர ரொம்ப யோசிப்பதில்லை. மாறாக வலி மிகுந்த உறவுகளிலேயே ஒட்டிக்கொள்கிறோம்". ARM உடனான உறவும் அப்படி தான். இனியும் ARM will remain my darling. மொத்தத்தில் இந்த பயணத்தில் எனக்கு கிடைத்த இனிமையான அனுபவம் இந்த குற்ற உணர்ச்சிகளில் இருந்து விடுபட்டது தான்.

கீழப்பழூர் தாண்டியபோது தான் தெரிந்தது "கங்கை கொண்ட சோழபுரம்" நாங்கள் எதிர்பார்த்ததை விட 40 கி.மீ கூடுதல் தூரத்தில், அதாவது தஞ்சையிலிருந்து கிட்டத்தட்ட 84 கி.மீ தூரத்தில் உள்ளது என்று. தனது கல்யாணத்துக்காக பத்திரிக்கை விநியோகிக்க வேண்டிய நேரத்தில் அவனை இப்படி அலைக்கழிக்கிறேனே என்று ஏற்கனவே எனக்கு குறுகுறுப்பாக இருந்தது. அதனால் LMS - இடம் "பேசாமல் திரும்ப போய்விடலாம்" என்று சொன்னேன். அதற்கு அவன் "இவ்வளவு தூரம் வந்துவிட்டு திரும்ப போவதா? நாம் க.கொ.சோழபுரம் போகிறோம்" என்று சொன்னான். நான் அவனிடம் "Please don't be so nice. எனக்கு மீண்டும் உன்னை அதிகம் பிடித்துவிட போகிறது" என்று சொன்னேன். கடைசியில் அது தான் நடந்தது!!!

{oshits} readers!!!{/tabs}