Miscellaneous
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Click the image to read furtherமறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் கன்னி முயற்சி - நாவல் எழுதுவதில். இது இவர் திரைக்கதையாசிரியராக செய்த முயற்சி கைகூடாததால் நாவலாக மாற்றி தன்னுடைய முதல் நாவலாக எழுதினாராம் ஸ்டெல்லா. ஆனால் இந்த கதையை நான் திரைப்படமாக பார்த்திருக்கிறேன். அதை பற்றி கடைசியில் சொல்கிறேன். தலைப்பே சொல்லிவிடும் - இது ஒரு காதல் கதை என்று. இது ஒரு முக்கோண காதல் கதையும் கூட. குற்றாலத்திலிருந்து சென்னை வரும் வைத்தியநாதன், அவனது மேலாளர் சூர்யா (பெண்), அவனது சக ஊழியை ஆனந்தி என மூவரிடையே பின்னப்பட்ட காதல் வலை தான் - ஒரு முறை பூக்கும். இறுதியில் யாருடைய காதல் ஜெயித்தது என்பது தான் முடிவு. ஒரு சிறந்த எழுத்தாளருடைய கன்னி முயற்சி என்பதை தவிர பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இதில் எதுவும் இல்லை.


ஆரம்பம் அழகாக இருக்கிறது. குற்றாலத்தில் இருந்து சென்னை வரும் வைத்தியநாதனுக்கும், அவன் அப்பா செல்வரத்னத்துக்கும் இடையே உள்ள உறவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. 12 வயதிலேயே தாயை இழந்த வைத்தியநாதனுக்கு பெண்கள் குறித்த பார்வை தாய்மையின் அடிப்படையிலேயே இருக்கிறது. ஒரு சிறந்த பெண்ணிடம் தன்னை ஒப்படைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்படிப்பட்ட பெண்ணின் தேடல் அவனை சென்னைக்கு செலுத்துகிறது. மொத்தக்கதையும் 2 மாதங்களுக்குள்ளாக தேதி வாரியாக சொல்லப்படுகிறது. வைத்தி சென்னைக்கு வந்தவுடனேயே அவனுடைய மேலாளரான சூர்யாவிடம் மனதை பறிகொடுக்கிறான். அவளை அணுக அவனுடைய தோழர்கள் பென்ஜமின் மற்றும் மனோகர் ஆகியோர் சில சுவாரசியமான ஆட்டங்களை உருவாக்க, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வைத்தியின் காதல் வளர்கிறது.

ஊடாக அவனது சக ஊழியையான ஆனந்திக்கு வைத்தியின் மீது காதல் ஏற்படுகிறது. பிறவி ஊமையான ஆனந்திக்கு அதை அவனிடம் சொல்ல நாணம் தடுக்கிறது. வைத்தி சூர்யாவிடம் தன் காதலை வெளிப்படுத்த தான் திருமணமானவள் என்கிற காரணத்தால் வைத்தியின் காதலை நிராகரிக்கிறாள். பின்னர் நடக்கும் நிகழ்ச்சிகளால் வைத்தியநாதன் ஆனந்தியை திருமணம் செய்துக்கொண்டு குற்றாலத்துக்கு போய்விடுகிறான்.

உண்மையை சொல்லப்போனால் இந்த நாவலை படிக்க ஆரம்பித்த கொஞ்ச பக்கங்களிலேயே இது ’அந்த’ படம் தான் என்று தெரிந்துவிட்டது. எனினும் ஸ்டெல்லா புரூஸின் எழுத்துக்களுக்காகவே தொடர்ந்து படித்தேன். சில கதைகளை நாம் நாடகம் / திரை வடிவில் பார்த்த போதும், அதன் மூலமான புத்தக வடிவங்களை படிப்பது நன்றாக இருக்கும். இதுவும் அப்படி இருக்குமோ என்கிற நப்பாசையில் படித்துக்கொண்டு இருந்தேன். எனினும் அந்த திரைப்படத்தின் காட்சிகளே மனதில் விரிந்து படிக்கும் அனுபவத்தை கெடுத்துக்கொண்டு இருந்தது. அதை தாண்டி நம்மை வெளியே கொண்டு போகும் அளவுக்கு எழுத்திலோ, கதையிலோ சுவாரசியம் இல்லை என்பது வருத்தமே. பாலகுமாரனின் ‘தாயுமானவன்’ கூட நான் முதலில் தொலைகாட்சி தொடராக பார்த்துவிட்டு பல வருடங்களுக்கு பின்பு தான் புத்தகமாக படித்தேன். எனினும் புத்தகம் பயங்கர சுவாரசியமாக இருந்தது.

இது திரைக்கதையாக முதலில் எழுதப்பட்டது என்பதால் 80-களில் வந்த தமிழ் சினிமாவின் பாதிப்பு அதிகம். உதாரணத்துக்கு கதாநாயகனுக்கு துணை நிற்கும் 2-3 கட்டாய நண்பர்கள், கொஞ்சம் துணிச்சலான கதாநாயகி, பரிதாபத்தை அள்ளிக்கொள்ளும் இரண்டாவது கதாநாயகி, செண்டிமெண்டுக்கு ஒரு பாட்டி என எல்லாமே நாம் ஏற்கனவே பார்த்து புளித்த அரத பழைய கலவைகள். இதற்கப்புறம் தான் ”மாயநதிகள்”, “அது ஒரு நிலாக்காலம்” எல்லாம் எழுதினார் என்றால் எழுதிஸ்டெல்லாவின் பரிணாம வளர்ச்சியை கண்கூடாக காணலாம். இதற்கு மேல் இந்த நாவலை பற்றி சொல்ல, எழுத முடியவில்லை என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

‘அந்த’ படம் - பாண்டியன், ரேகா, ரம்யா கிருஷ்ணன் நடித்த - “ஆண்களை நம்பாதே”. நடிகர் அலெக்ஸ் பாண்டியன் தயாரித்து, இயக்கி, கதாநாயகனின் தோழனாகவும் நடித்து இருந்தார். நாவலுக்கும் திரைப்படத்துக்கும் ரொம்ப அதிகமான வித்தியாசம் எல்லாம் இல்லை. பெயர்கள் கூட மாற்றப்பட்டிருக்கவில்லை. பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கும் போதே எப்படிப்பட்ட நடிப்பாக இருந்திருக்கும் என்று உங்களால் எளிதாக யூகிக்க முடியும். சூர்யாவாக ரேகாவும், ஆனந்தியாக ரம்யா கிருஷ்ணனும், பாட்டியாக கொல்லங்குடி கருப்பாயியும் நடித்திருந்தனர். தமிழ் படம் என்றால் ஒரு வில்லன் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதால சூர்யாவின் கணவனை வில்லனாக இடைசெருகியிருந்தனர்.

ஒரு முறை டி.டி-யில் ஒளிபரப்பான அந்த படத்தை பார்த்தபோது தான் - “படம் ஒன்னும் சுவாரசியமா போகலையே” என்று முதல்முறையாக திரைக்கதையின் பங்கை உணரமுடிந்தது. மேலும் அந்த படத்தின் பாண்டியன் கல்யாணம் செய்துக்கொள்ளும் இடத்தில் வந்த பாடலில் ஒரு பல்லவியை முழுதும் ஒரே ஷாட்டில் அலெக்ஸ் பாட, அப்போது தான் ”ஷாட் கட் செய்யாமல்” ஒரே தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை உணரமுடிந்தது. அதனால் தான் இந்த படத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். ஒருவேளை தேர்ந்த இயக்குநரின் கையில் கிடைத்திருந்தால் ஸ்டெல்லாவின் கதை நன்றாக எடுக்கப்பட்டிருக்குமோ என்னவோ.

ஆ.ந -வை பார்த்துவிட்டு நான் கேட்ட முதல் கேள்வி - இதற்கு பெண்களை நம்பாதே என்று தானே பெயர் வைத்திருக்கவேண்டும்? காரணம் சூர்யா காதலித்து ஏமாந்தது வைத்தியநாதன் தானே பின் ஏன் ‘ஆண்களை நம்பாதே” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். பின்பு தான் புரிந்தது அப்போது தமிழ் சினிமா தாய்மார்களின் பேராதரவில் இருந்தது. அவர்களை கவரவே பரிதாபமாக “ஆண்கள்” தலையில் பழியை கட்டிவிட்டார் தயாரிப்பாளர்.