Sujatha
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
Kanavu thozhirchalaiசுஜாதாவின் இந்த திரையுலகத்தில் நடப்பதாக எழுதப்பட்ட நாவலை முதலில் படிக்க கொஞ்சம் கசப்பாக தான் இருந்தது. அதனால் தான் முதல் அத்தியாயத்தை மட்டும் படித்துவிட்டு அப்படியே விட்டுவிட்டேன். தன் நாவலின் முதல் அத்தியாயத்தை திரையுலக பிரமுகர்களான இயக்குநர் மகேந்திரன், நடிகை லட்சுமி ஆகியோருக்கு படிக்க கொடுத்துவிட்டு, அதை பற்றிய தன்னுடைய உரையாடலை முன்னுரையில் போட்டிருக்கிறார் சுஜாதா. ’சினிமாவுக்கு சென்ஸார் அவசியமா?’, ‘அமெரிக்காவில் உள்ளது போல நீலப்படங்களை திரையிட தனி தியேட்டர்கள் வேண்டும்’ ஆகிய வழக்கமான வாதங்களை கொண்ட உரையாடல் என்றபோதும், எழுத்தில் கவர்ச்சியாக இருப்பது திரையில் ஆபாசமாக தோன்றும் என்றும், எழுத்தும் திரையும் வெவ்வேறு ஊடகங்கள் என்று நினைவில் கொண்டபிறகே படைப்புகளை படைக்கவேண்டும் என்ற ஒரு சுவாரசியமான வாதத்தை முன்வைக்கிறார். ஒரு எழுத்தாளருக்காக சென்னை அண்ணா சாலையில் கட்-அவுட் வைக்கப்பட்டது இந்த ஆனந்த விகடனில் வெளியான இந்த நாவலுக்காக தானாம். ‘கனவு தொழிற்சாலை’ எழுதப்பட்ட 70 களின் இறுதியில் அது path breaking-ஆக இருந்திருக்கலாம் ஆனால் இப்போது அது பழகிவிட்டது.

 

சொல்லப்போனால் சினிமாவில் ஆபாசகூத்துகள் அப்பட்டமாக அரங்கேறுவதற்கும், காலப்போக்கில் அது குறையாமல் கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டமாக ஆனதற்கும் பத்திரிகைகள் கிசுகிசுக்களுக்கு கொடுத்த கூடுதலான முக்கியத்துவம் தான் என்பது என்னுடைய அபிப்பிராயம். இலை மறை காயாக நடந்த விஷயங்கள் ‘கிசுகிசு’ என்ற பெயரில் அம்பலத்துக்கு வந்தப்புறம் காலப்போக்கில் கொஞ்ச நஞ்ச கூச்சமும் நீங்கி ‘நாங்கள் அப்படி தான்.. உன்னால் ஆனதை பார்த்துக்கோ’ என்ற திமிர் சினிமாக்காரர்களுக்கு வந்ததும், ஆரம்பத்தில் சினிமா ஆசையில் ஓடி வந்து சீரழிந்த படிக்காத பெண்களின் கதையை ’கிசு கிசு’ என்கிற பெயரில் பத்திரிகைகள் அக்குவேறு ஆணிவேறாக அலசிய காரணத்தால் இப்போது நடிக்க வரும் மேல்தட்டு பெண்கள் கூட பார்த்து “அப்படி இப்படி” நடந்துகிட்டா முன்னேறிடலாம், வாய்ப்புக்காக படுப்பது பெரிய விஷயமில்லை என்று எதற்கும் தயாராகவே வந்து Casting couch-ஐ ஒரு வழக்கமான procedure-ஆகவே மாற்றிவிட்டனர். இப்போது ’கனவுத் தொழிற்சாலை’க்கு வருவோம்.

இது ஒரு reigning superstar-ஐ பற்றிய நாவல். அருண் விஜய் என்கிற நடிகன் புகழின் உச்சத்திலிருந்து சறுக்க தொடங்கும் சமயத்தில் கதை ஆரம்பித்து, விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதில் முடிகிறது. இடையில் சினிமா நடிகர்கள் மீண்டும் பாமர வாழ்க்கைக்கு திரும்புவது இயலாத காரியம் என்றும், அதனாலேயே சினிமாவிலேயே காதல்கள் உருவாவதாகவும், பின்னர் அந்த காதல்கள் ego clashes மூலம் முடிவுக்கு வருவதையும் சொல்லி இருக்கிறார். அருணுக்கு கூட நடிக்கும் பிரேமலதாவுடன் உடலுறவுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் சிறிய வயதில் கூட வளர்ந்த கல்யாணியை திருமணம் செய்துக்கொள்ள செய்யும் முயற்சிக்கு அவள் தந்தை முட்டுக்கட்டை போட, கோபத்தில் பிரேமலதாவையே தன் வாழ்க்கை துணைவியாக கைப்பிடிக்கிறான். திருமணத்துக்கு பின் படங்கள் தொடர்ச்சியாக சுருண்டுக்கொள்ள, தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியாக சொந்தப் படம் எடுக்க முயல்கிறான் அருண். இடையில் அருண் - பிரேமலதா வாழ்க்கையில் ego clashes வெடிக்க, மீண்டும் கல்யாணியை தேடிப்போகிறான். அருணின் திருமண வாழ்க்கை அத்தோடு முடிந்ததா, மேலும் அருணின் superstardom என்ன ஆனது என்பது மீதிக்கதை.

ஊடாக பல கிளைக்கதைகள் வளைய வருகின்றன. சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகும் அருமைராசன், சினிமாவில் கதாநாயகி ஆகவேண்டும் என்ற ஆசையில் அலைக்கழிப்புகளை பொறுத்துக்கொள்ளும் மனோன்மணி, தரமான சினிமாவை தரவேண்டும் என்று போராடும் மாணிக்கம், சமயம் பார்த்து ஏமாந்தவர்களிடம் காசு கறக்கும் கிட்டு, கதையை நம்பாமல் சதையை நம்பி படம் எடுக்கும் லட்சுமணன் - இவர்களுடைய கதைகள் கிட்டத்தட்ட parallel-ஆக வருகிறது.

கதையின் ஆரம்பத்தில் அருணை பற்றிய அறிமுக காட்சிகளில் வார்த்தைகளை அமிலத்தில் தோய்த்து எழுதியது போல படு காரம். நான் இந்த புத்தகத்தை பல மாதங்களுக்கு முன்பு படிக்க ஆரம்பித்துவிட்டு முதல் அத்தியாயத்தின் காரம் தாங்காமல் படிக்காமல் விட்டுவிட்டேன். பின்பு பல மாதங்கள் கழித்து தான் மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். கதை முழுவதும் சுஜாதா இரக்கமே இல்லாமல் அருணின் நிர்வாணத்தையும், கதையில் வரும் கிட்டத்தட்ட அத்தனை பெண்களின் மார்பகங்களையும் வர்ணித்திருக்கிறார். இதை தான் இயக்குநர் மகேந்திரன் முன்னுரை உரையாடலில் “இப்படி எழுதுகிறீர்கள்... ஆனால் படமாக எடுத்தால் ஆபாசம் என்கிறீர்கள்” என்று கேட்கிறார். முதல் அத்தியாயத்தில் வரும் அருண் - பிரேமலதாவின் உடலுறவு காட்சி எந்தவித pretext-உம் இல்லாமல் நேரடியாக “படுக்க தானே கூப்பிட்டே.. இப்போ எதுக்கு மத்த பேச்சு” என்று முகத்தில் அறைவது போல இருக்கிறது. நாவல் முழுக்க சினிமாவில் ego எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டவர்களை ஆட்டிப்படைக்கிறது என்று புட்டுபுட்டு வைக்கிறார். மேலும் சினிமாவில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை என்கிற உண்மையை லட்சுமணன் - அருண் மூலம் காட்டி இருக்கிறார்.

இருப்பினும் இந்த நாவலில் எனக்கு பல வருத்தங்கள் உண்டு. ஒருவேளை உண்மை இது தான், எனவே poetic justice எல்லாம் அவசியம் இல்லை என்று வேண்டுமென்றே விட்டுவிட்டாரா என்று தோன்றுகிறது. கதையே இல்லாமல் வெறுமனே ego-வுக்காக படம் எடுக்கும் ஸ்டார் வெற்றிபெறுகிறான். ஆனால் நல்ல சினிமா கொடுக்கவேண்டும் என்று முயற்சிக்கும் மாணிக்கத்துக்கு கிடைப்பது படுதோல்வியே. நம் மக்கள் நல்ல படங்களுக்கு ஆதரவளிப்பதில்லை மாறாக ஸ்டார்கள் கொடுக்கும் குப்பைகளை ரசிக்கிறார்கள் என்பது கொஞ்சம் வருத்தமான உண்மையே. அதுபோல இரண்டாவது கதாநாயகியாக வாய்ப்பளிப்பதாக கூறி படுக்கையில் கசக்கப்படும் மனோன்மணி ’எல்லாம்’ முடிந்த பின்பு வாய்ப்பு தராமல் அலைக்கழிக்கப்படுவது, பின்னர் survive செய்வதற்காக கற்பழிப்பு காட்சியில் ஒத்துக்கொண்டு பாடுபடுவதும், கடைசியில் வெறுத்துப்போய் தற்கொலை செய்துக்கொள்வதும் கஷ்டமாக உள்ளது. கிட்டத்தட்ட மனோன்மணியை தவிர அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு சுபமான முடிவு கிடைத்தது இந்த நாவலில்.

இது 70 களின் இறுதியில் எழுதப்பட்ட நாவல் என்பதால் அன்றைய சினிமா உலகத்தை படம் போட்டு காட்டுவதாக உள்ளது. இன்று தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமா முன்னேறி இருந்தாலும், கிட்டத்தட்ட திரைக்கு பின்னால் நடக்கும் சம்பவங்கள் எதுவும் மாறவில்லை. அதே ego trips, casting couches, star divorces என சினிமா அப்படியே தான் இருக்கிறது. சொல்லப்போனால் இன்று இவை எழுதப்படாத சட்டங்களாக வாய்ப்பு தேடி வருபவர்களை ’எதற்கும்’ தயாராக வர வைத்து இருக்கிறது. நான் வேறொரு பதிவின் ஆரம்பத்தில் சொல்லியுள்ளது போல சுஜாதாவின் எழுத்துக்கள் காலத்துக்கு அப்பாற்பட்டது. எப்போது படித்தாலும் contemporary-ஆக இருக்கிறது. ‘கனவுத் தொழிற்சாலை’யும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

புத்தக விவரம்:
பதிப்பாளர்கள்: விசா பதிப்பகம், 11, சௌந்தர்ராஜன் தெரு, தி.நகர், சென்னை - 600 017. போன்: 044-24342899 / 24327696
பக்கங்கள்: 288
விலை: ரூ. 135/-