தீபாவளி நரகாசுரன் செத்ததுக்காக கொண்டாடப்பட்டதா இல்லை ராமர் அயோத்திக்கு திரும்ப வந்ததுக்காக கொண்டாடப்பட்டதாங்குற காரணம் எதுக்குங்க? ஒவ்வொரு தீபாவளியும் நமக்கு சந்தோஷமா போச்சா? அவ்ளோ தான். எனக்கென்னவோ முன்னாடி மாதிரி இப்போ தீபாவளி அவ்வளவு சந்தோஷமா கொண்டாடப்படுறது இல்லைன்னு ஒரு அபிப்பிராயம். என்னடா இவன்... “எங்க காலத்துல”ன்னு பெருசுங்க போல ஆரம்பிக்குறானேன்னு பயப்படாதீங்க, நான் ”யூத்” இல்லைன்னாலும் அவ்ளோ ”பெருசு” இல்லை. தீபாவளின்னாலே விடிய காலையிலே எழுந்து சீயக்காய் வச்சு, எண்ணெய் தேய்ச்சு குளிச்சு, அம்மா கையால மஞ்சள் வச்ச புதுத்துணி வாங்கி போட்டுகிட்டு தீபாவளி வந்துடுச்சுன்னு கட்டியம் கூறுர மாதிரி ஒரு சரவெடி போட்டு, வெளிச்சம் வந்தா மத்தாப்பு நல்லா தெரியாதுன்னு அவசரம் அவசரமா 2 டப்பா மத்தாப்பு காலி பண்ணி, வெளிச்சத்துல நம்ம டிரெஸ் எப்படி இருக்குன்னு பார்த்துகிட்டு, பக்கத்து வீட்டு பிள்ளைங்க கிட்டே “இது தான் உன் தீபாவளி டிரெஸ்ஸா?”ன்னு பார்த்து (சில சமயம் மனசுக்குள்ளே சின்ன பொறாமையோடு) ஒப்பிட்டுக்கொண்டு, அம்மா செய்த தீபாவளி பலகாரங்களை சம்புடங்களில் போட்டு தர பக்கத்து வீடுகளுக்கு கொண்டுப்போய் கொடுத்துவிட்டு வந்து, தேங்காய் அரிசி மாவு அடை - கறிக்குழம்பு என்ற தீபாவளி ஸ்பெஷலை முடித்துவிட்டு, விடிய்ற்காலையில் நேரமே எழுந்தது கண்ணை அழுத்த, கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு மாலையில் (தீபத்துக்கு என்று கொஞ்சம் ஒதுக்கப்பட்ட பிறகு மீதி) பட்டாசு எல்லாத்தையும் காலி செய்து தீபாவளி முடிஞ்சுது என்பதை அறிவிக்கும் விதமாக பட்டாசு குப்பைகள், வெடிக்காத பட்டாசுகள் என எல்லாவற்றையும் கொளுத்து முடிக்கும்போது “இனி அடுத்த வருஷம் தான்” என்ற ஏக்கம் தான் மிஞ்சும். இப்போ டி.வியிலே சினிமாக்காரன் / சினிமாகாரிகளின் இளிப்பு, சினிமா இவற்றுக்கு இடையே கிடைத்த கொஞ்ச நேரத்தில் பிள்ளைகள் பட்டாசு வெடித்துவிட்டு கடமையாக டி.வியில் ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள். விடுங்க... இது தமிழனின் சாபம் (கலாநிதி மாறன் குடும்ப உபயம்)... இதை நினைக்கிறதை விட உங்களுடன் சில தீபாவளிகளின் நினைவை பகிர்ந்துக்கலாம்.