கூடா நட்பு...
24 - படத்தில் வருவது போல நமக்கு காலத்தில் பின்னோக்கி செல்லும் கடிகாரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒவ்வொருவரும் நம் வாழ்வில் செய்த தவறுகளை சரிசெய்துவிட்டு நல்லபடியாக வாழலாம். எனக்கு அப்படி ஒரு கடிகாரம் கிடைத்தால் எந்த காலத்துக்கு போவேன்? எனது 10ம் வகுப்பு முடிந்த தருணத்துக்கு போவேன். நான் செய்த மிகப்பெரிய தவறு 11-ம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்றது தான். பத்தாம் வகுப்பில் நான் பள்ளியின் முதல் மாணவனாக வந்திருந்தேன். ஒருவேளை அதே பள்ளியில் படித்திருந்தால் என் மீது வைக்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து நன்றாக படித்திருப்பேனோ என்னவோ? ஆனால் புதிய பள்ளியில் நான் போனபோது தனியாக இருப்பது போல உணர்ந்தேன். சரியான நண்பர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் கிடைத்த நண்பர்களுடன் என் வாழ்க்கையின் அந்த முக்கிய வருடங்களை கழித்தேன். எனது பொறுப்பின்மையுடன் கூடா நட்பும் சேர்ந்து எனது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.