24 - படத்தில் வருவது போல நமக்கு காலத்தில் பின்னோக்கி செல்லும் கடிகாரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒவ்வொருவரும் நம் வாழ்வில் செய்த தவறுகளை சரிசெய்துவிட்டு நல்லபடியாக வாழலாம். எனக்கு அப்படி ஒரு கடிகாரம் கிடைத்தால் எந்த காலத்துக்கு போவேன்? எனது 10ம் வகுப்பு முடிந்த தருணத்துக்கு போவேன். நான் செய்த மிகப்பெரிய தவறு 11-ம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்றது தான். பத்தாம் வகுப்பில் நான் பள்ளியின் முதல் மாணவனாக வந்திருந்தேன். ஒருவேளை அதே பள்ளியில் படித்திருந்தால் என் மீது வைக்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து நன்றாக படித்திருப்பேனோ என்னவோ? ஆனால் புதிய பள்ளியில் நான் போனபோது தனியாக இருப்பது போல உணர்ந்தேன். சரியான நண்பர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் கிடைத்த நண்பர்களுடன் என் வாழ்க்கையின் அந்த முக்கிய வருடங்களை கழித்தேன். எனது பொறுப்பின்மையுடன் கூடா நட்பும் சேர்ந்து எனது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.
கூடா நட்பு என்றால் நான் சேர்ந்த நண்பர்கள் கெட்டவர்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் அவர்களது எண்ணங்களும், வாழ்க்கையின் தேடல்களும், படிப்பும் நான் கொண்டிருந்திருக்க வேண்டிய உயரத்தில் இல்லை. அதனால் அவர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் நான் பரவாயில்லையாக தோன்றியது. அதனால் இது மோசமில்லை என்ற எண்ணத்திலேயே நான் மேலும் மேலும் mediocre - ஆக மாறிக்கொண்டிருந்தேன். பின்னர் என் தவறை உணர்ந்தபோது எனது திறமை பயங்கரமாக மழுங்கியிருந்தது. மீண்டு வர காலங்கள் பிடித்தது.
அதற்கப்புறமும் எனக்கு "தவறான நபர்கள் " மீது ஈடுபாடு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. எனக்கு ஈடுபாடு வரும் நபர்கள் என்று பார்த்தால் பயங்கர carefree - ஆக, தன்னை பற்றி மட்டுமே சிந்திக்க தெரிந்த, நிறைய திமிராக உள்ளவர்கள் மீது தான் ஈடுபாடு ஏற்பட்டு வந்தது. ஒருவேளை என்னிடம் இல்லாத குணங்களை, என்னால் நடந்துக்கொள்ள முடியாத முறைகளை, பழக்கங்களை, நடவடிக்கைகளை நான் அவர்கள் கொண்டவர்களிடம் பார்க்கும்போது ஈர்க்கப்பட்டிருக்கிறேன் போல. சில நாட்களிலேயே எனக்கு தெரிந்துவிடும் - இந்த நட்பு ரொம்ப நாள் நீடிக்க வழியில்லை என்று. இருந்தும் அந்த நட்பு முடியும்போது அதிலிருந்து மீள ரொம்ப நாட்கள் / மாதங்கள் பிடிக்கும்.
வாழ்க்கை என்பதே அனுபவங்களின் கோர்வை தானே? யாருக்கும் அவர்களது வாழ்க்கை எல்லா நேரத்திலும் நேர்க்கோட்டில் போனதாக சரித்திரம் இல்லை. எல்லாமே trial and error தானே? மெல்ல மெல்ல எனது நட்பு வளையத்தில் யார் இருக்கவேண்டும் என்று ஒரு புரிதல் ஏற்பட்டது. ஒருவர் நம் மீது நேர்மறையான எண்ணங்களை விதைப்பராயின், அவர்களிடத்தில் இருந்து நாம் ஏதேனும் ஒரு சின்ன நல்ல விஷயமேனும் கிரகித்துக்கொள்ள முடியுமெனில், அவர்களது presence ஏதோ ஒரு விஷயத்தில் நம்மை positive- ஆக influence செய்யும் என்றால் நாம் அவர்களை எந்த தருணத்திலும் இழந்துவிடக்கூடாது. இப்போது எல்லாம் என் வாழ்க்கையில் யாரேனும் வந்தார்கள் என்றால் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள ஏதேனும் நல்ல விஷயங்கள் உள்ளதா என்று தான் முதலில் பார்க்கிறேன். ஒரு சிலரை பார்க்கும்போது இப்படி நாம் இருந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கும் விதமாக தோன்றும். அது கூட ஒருவகையில் நேர்மறையான பாடம் தான்.
நான் யாரையும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று முத்திரை குத்தவில்லை. இவர்களால் எனக்கு நன்மை நடக்குமா (பொருளாதார ரீதியாக அல்ல), என்னுள் ஒரு நேர்மறையான மாற்றம் நிகழ்த்துவார்களா என்று மட்டும் தான் பார்க்கிறேன். நான் நெருங்கிய நண்பர்கள் என்று கருதும் ஒவ்வொருவரிடமும் நான் எடுத்துக்கொள்ள ஒரு சின்ன விஷயமாவது இருக்கும். அப்படி இல்லாதவர்களிடம் எனக்கு ஈடுபாடு ஏற்படுவதில்லை. ஈடுபாடு ஏற்படவில்லை என்பதற்கு வெறுக்கிறேன் என்று அர்த்தமில்லை. அவ்வளவே... நான் perfect இல்லை. அதனால் என்னை perfect ஆக்க ஊக்குவிக்கும் நண்பர்கள் மீது மட்டுமே இப்போது எனக்கு ஈடுபாடு வருகிறது.
நாம் எல்லோரும் மழை நீர் போன்றவர்கள். விழும் இடத்தை பொறுத்தே மழைநீர் குடிநீராகவோ இல்லை சாக்கடையாகவோ மாறுகிறது. அதுபோலவே நாம் நம் வாழ்க்கையில் இடம் கொடுக்கும் மனிதர்களை போல நடந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். அதனால் சரியான இடத்தில் விழுவோமே.. நம்மை inspire செய்யும் மனிதர்களோடு இணைவோமே. கடந்த மாதம் தமிழகத்தை உலுக்கிய இரு மரணங்கள் - சென்னை சுவாதி, மேட்டூர் வினுப்ரியா ஆகியோரின் சாவில் உள்ள ஒரே ஒற்றுமை - அந்த மரணத்திற்கு காரணம் Facebook மூலம் உண்டான கூடா நட்பு.