கொஞ்ச வருஷத்துக்கு முன்பு செக்ஸ் இயக்குநர் எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்து வெளியான "அ.. ஆ "வுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படம் வெளியாகி அதன் கதை சுருக்கம் படித்ததிலிருந்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற கொள்ளை ஆர்வம். ஒரு டொச்சு கேமிரா பிரிண்டில் முதன் முதலில் இதை பார்த்தபோதே பிடித்திருந்தது. இப்போது ஒரிஜினல் டிவிடி வந்ததும் தெளிவான வசனங்களோடு ரசித்து பார்க்க முடிந்தது. ஏன் இவ்வளவு ஆர்வம்? எனக்கு மிகவும் பிடித்த நாவலான "முள்பாதை "யின் மறு திரைப்பதிப்பு இது. இந்த நாவலை இந்த வலைமனையின் "Novels" பகுதியில் படிக்கலாம்.
கண்டிப்பான அம்மாவின் கட்டுப்பாட்டில் புழுங்கித் தவிக்கும் அனசூயா தனது 23வது பிறந்தநாளில் தற்கொலைக்கு முயற்சிப்பதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. அம்மா பார்த்து வைத்த மாப்பிள்ளை பெண் பார்க்க வரும் சமயத்தில் அனசூயாவின் அம்மா சென்னைக்கு பிசினெஸ் விஷயமாக சென்னை போக, அந்த சமயத்தில் கலவபூடி கிராமத்தில் உள்ள அவள் அத்தை (அப்பாவின் சகோதரி)வீட்டுக்கு அப்பாவால் அனுப்பி வைக்கப்படுகிறாள். அங்கே உள்ள அவள் அத்தை பையன் ஆனந்த் விகாரியை பார்த்து மோதலுக்கு பிறகு காதல் கொள்கிறாள். பிறகு வழக்கம் போல என் குட்டிப்பையன் ஆதி கூட யூகிக்கும் அளவுக்கு எளிமையான கதை.
அ.ஆ! ஒரு அழகான feel good movie. "முள்பாதை" பிரபல தெலுங்கு பெண் எழுத்தாளரான யத்தன்னபூடி சுலோசனாராணி அவர்களால் 1970-ல் எழுதப்பட்டது. அதை 2016-க்கு ஏற்ப மாற்றும்போது நாவலில் இல்லாத சில கதாபாத்திரங்களும், காட்சிகளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் எளிமை கெடாமல் திரைக்கதை அமைப்பது என்பது கொஞ்சம் சவாலே. "முள்பாதை " ஏற்கனவே 1972-ல் 'மீனா ' என்ற பெயரில் நடிகை விஜயநிர்மலா அவர்களால் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியாகிவிட்டது. அதில் நாவலில் உள்ள அத்தனை காட்சிகளையும் அடக்க முயற்சித்து கொஞ்சம் சுவாரசியம் கம்மியாக இருந்தது. ஆனால் "அ..ஆ!"வில் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாச ராவ் இதன் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு புதிதாக திரைக்கதை எழுதியிருக்கிறார். இருப்பினும் நாவலின் முக்கியமான காட்சிகள் தக்க வைக்கப்பட்டுள்ளது.
இதிலும் கிராமத்து காட்சிகள் அழகானவை. குறிப்பாக அனசூயா புதிய டி.வி மற்றும் ஏ.சி வாங்கும் காட்சியும் அதை தொடர்ந்த கலாட்டாக்களும். இதில் நாவலில் இல்லாமல் புதிதாக சேர்க்கப்பட்ட சுவாரசியமான கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் - அனசூயாவின் உதவியாளர் மங்கா மற்றும் இரண்டாவது கதாநாயகியின் அண்ணனாக வரும் அஜய் ராவ் இருவரும். இருந்தும் பிற்பகுதியில் கதை தடம் புரள்வதை ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருக்கிறது. முள்பாதை படிக்காதவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.
அ..ஆ!வின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் என்று பார்த்தால் அதன் நடிகர்கள் தேர்வும், துடைத்து வைத்ததுபோன்ற பளிச்சென்ற ஒளிப்பதிவும், எளிமையான இனிமையான வசனங்களும் தான். இதன் இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தை விட ஒரு சிறந்த வசனகர்த்தா என்பது அனைவரும் ஒத்துக்கொள்ளும் விஷயம்.
கதாநாயக நிதின் நாவலில் வந்த கிருஷ்ணன் கதாபாத்திரத்துக்கு புது பரிமாணம் கொடுத்திருக்கிறார். நாவலில் வருவது போல முரட்டுத்தனமான ஆண்மையுள்ள தோற்றம் இல்லை என்றபோதும் அடுத்த வீட்டு பையன் போல இயல்பாக அசத்தியிருக்கிறார். கதாநாயகி அனசூயாவாக சமந்தா கொள்ளை அழகு என்றால், அவர் உதவியாளராக வரும் ஹரி தேஜா (பெண்) பல இடங்களில் சமந்தாவை தூக்கி சாப்பிட்டுவிடுகிறார். கதாநாயகனின் தங்கையான 'நாடோடிகள்'அனன்யா இன்றும் கூட அதே இளமையுடனும், துறுதுறுப்புடனும் நம்மை கவர்கிறார். 'பிரேமம்'புகழ் அனுபமா பரமேஸ்வரன் இதில் நாயகன் மீது தீரா மோகம் கொண்ட இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் ஒருவித வில்லத்தனமான வெறுப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், கடைசி காட்சியில் படம் பார்ப்பவர்களின் அனுதாபத்தை சம்பாதித்து அப்படியே யூ-டர்ன் அடித்திருக்கிறார். நாயகியின் அப்பாவாக வரும் நரேஷ் காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.
கதாநாயகியின் அம்மாவாக நதியா நடித்திருப்பது அவர் நடித்த "அத்தரிண்டிக்கி தாரேடி " படத்தை நினைவுபடுத்துவது போல அமைந்திருப்பது படத்தின் பலவீனம். பின் பாதியில் வரும் சோக காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கிறது. கடைசியில் வரும் தெலுங்கின் mandatory ஆன chase scene-ம் இதன் magic-ஐ மட்டுப்படுத்திறது.
ஒளிப்பதிவு - 'சதுரங்க வேட்டை 'புகழ் நடராஜ் சுப்பிரமணியம் என்கிற நட்டி. இவர் ஏற்கனவே ஹிந்தியில் பரிணீதா, Jab we met, லவ் ஆஜ் கல், ஏகலவ்யா என பல வெற்றிப்படங்களில் தன்னை நிரூபித்தவர். இந்த படம் மூலம் தெலுங்கில் கால் பதித்திருக்கிறார். ஏற்கனவே அற்புதமான பொள்ளாச்சியும், ஆந்திராவின் ராஜமந்த்ரியும், ஹைதராபாத்தும் இந்த படத்தில் இன்னும் அற்புதமாக ஜொளிக்கிறது.
சில தெலுங்கு படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கது - நின்னே பெல்லாடதா, மகதீரா, தொலி பிரேமா, பாகுபலி, சங்கராபரணம், அலா மொதலாயிந்தி, கீதாஞ்சலி, Happy Days, நுவ்வொஸ்தானன்டே நேனொத்தன்டானா, மனம், ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி முதலியன. அந்த வரிசையில் இப்போது "அ..ஆ!!"வும் சேர்ந்துவிட்டது. இவற்றை ரசிப்பதற்கு மொழி தடை அல்ல. சொல்லப்போனால் இவற்றை டப்பிங்கில் பார்த்தால் கேவலமாக இருக்கும். எனது அறையில் இவற்றில் எந்த படத்தை போட்டாலும், ரிமோட்டை தொடவேண்டிய அவசியம் இல்லாமல் கடைசி வரை ஓடும்.